ECONOMYHEALTHNATIONAL

உணவுப் பணவீக்கத்தால் சிறார்கள் மத்தியில் உடல் பருமன் பிரச்னை அதிகரிப்பு- நிபுணர்கள் எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 14- நாட்டில் நீடித்து வரும் உணவு விலையேற்றம், உணவு பணவீக்கம் மற்றும் உணவு விநியோகச் சங்கிலி பிரச்னைகள் சம சத்துணவைப் பெறுவதில் இடையூறை ஏற்படுத்தி மக்களின் சுகாதாரத்தைப் பாதிப்புக்குள்ளாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உணவு பணவீக்கத்தினால் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினரே பெரிதும் பாதிக்கப்படுவர் என்பதோடு அவர்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளாவர் என அவர்கள் கூறினர்.

இதன் காரணமாக ஆரோக்கியமற்ற உணவுகளை நாட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படும். இதனால் அவர்களின் பிள்ளைகள் உடல் பருமன், நீரிழிவு போன்ற பிரச்னைகளை  எதிர்நோக்க நேரிடும் என்றும் அச்சம் தெரிவித்தனர்.

தற்போதைய ஆய்வுகளின் படி குறைந்த வருமான பெறும் பி40 குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் மத்தியில் உடல் பருமன் பிரச்னை அதிகமாக உள்ளது தெரிய வந்துள்ளது.

குறைந்த வருமானம் பெறும் பி40 குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் மத்தியில் உடல் பருமன் மற்றும் அதிக எடைப் பிரச்னை முறையே 15.6 விழுக்காடு மற்றும் 15.4 விழுக்காடாக உள்ளதை 2019ஆம்  ஆண்டு தேசிய சுகாதார மற்றும் உடலாரோக்கியம் மீதான ஆய்வுகள் காட்டுகின்றன.

ஒருவரின் உடல் குறியீட்டு எண் (பி.எம்.ஐ.) 30க்கு மேல் இருந்தால் உடல் பருமனாகவும் பி.எம்.ஐ. குறியீடு 29 முதல் 29.9 வரை இருந்தால் அதிக எடை கொண்டனராகவும் கருதப்படுவார். ஒருவரின் உடல் எடை மற்றும் உயரத்தை சதுர கிலோமீட்டரில் வகுப்பதன் மூலம் பி.எம்.ஐ. குறியீடு கணக்கிடப்படுகிறது.

முன்பு, உடல் பருமன் பிரச்னை நகரங்களில் வசிக்கும் அதிக வருமானம் பெறும் தரப்பினருடன் தொடர்புடையதாக இருந்த தாக மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் சமூக சுகாதார கல்விக்கான மையத்தின் சத்துணவு அறிவியல் திட்ட விரிவுரையாளர் பேராசிரியர் டாக்டர் ருஸித்தா அப்துல் தாலிப் கூறினார்.

பணக்காரர்களின் சுற்றுச்சூழல் மற்றும் அவர்கள் உட்கொள்ளும் அதிக கேலோரி கொண்ட உணவு உடல் பருமனுக்கு காரணமாக இருந்தது. ஆனால், இப்போது நிலைமை மாறி விட்டது. புறநகர்ப்பகுதிகளில் வசிப்பவர்களும் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினரும் உடல் பருமன் பிரச்னையை எதிர்நோக்கி வருகின்றனர் என்று அவர் சொன்னார்.


Pengarang :