ANTARABANGSAECONOMY

இலங்கை நெருக்கடி- சிங்கப்பூருக்கு தப்பியப் பின் ராஜினாமா கடிதம் கொடுத்தார் அதிபர் ராஜக்சே

கொழும்பு/சிங்கப்பூர், ஜூலை 15- இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே நேற்று தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.

பொருளாதார வீழ்ச்சியின் விளைவாக ஏற்பட்ட மக்கள் புரட்சிக்குப் பின்னர் சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்ற அவர், அங்கிருந்து தனது பதவித் துறப்பு கடிதத்தை வழங்கியதாக நாடாளுமன்ற சபாநாயகரின் பேச்சாளர் கூறினார்.

அதிபரின் இந்த அறிவிப்பின் எதிரொலியாக கொழும்புவில் பெரும மகிழ்ச்சிக் கொண்டாட்டம் களைக் கட்டியது. மாநகரில் விதிக்கப்பட்ட ஊரடங்கு சட்டத்தையும் மீறி மக்கள் அதிபர் செயலகம் முன் கூடி சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தனர்.

கூட்டத்தினர் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு ராஜபக்சேவின் பெயரை  ‘கோத்தா கோ காமா‘ எனக் கேலி செய்து நடனமாடி மகிழ்ந்தனர்.

ஒட்டு மொத்த நாடும் இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறது. இது மிகப்பெரிய வெற்றியாகும் என்று இயக்கவாதியான டமித்தா அபேய்ரத்னா கூறினார்.

அவர்களிடமிருந்து நாடு விடுதலை பெறும் என்று நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவர் மேலும் சொன்னார். அந்த தீவு நாட்டை ராஜபக்சே குடும்பம் கடந்த 20 ஆண்டுகளாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த புதன் கிழமை மாலத் தீவுக்கு தப்பியோடிய ராஜபக்சே நேற்று  சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் மூலம் சிங்கப்பூருக்கு பயணமானதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறின.

ராஜபக்சே மற்றும் அவரின் மனைவி பயணம் செய்த இலங்கை ஆகாயப் படை விமானம் தரையிறங்குவதற்கு தாங்கள் அரச தந்திர அனுமதியை வழங்கியதாக மாலத் தீவு அரசாங்கம் முன்னதாக கூறியிருந்தது.

இதனிடையே, ராஜபக்சே தங்கள் நாட்டிற்கு தனிப்பட்ட வருகை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் அரசியல் புகலிடம் கோரவில்லை என்பதோடு அத்தகைய புகலிடமும் அவருக்கு வழங்கப்படவில்லை என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெளிவுபடுத்தியது.


Pengarang :