ECONOMYSELANGOR

 நாகரீக வளர்ச்சியின் மையமாக நூலகங்கள் விளங்குகின்றன- மந்திரி புசார்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 15- சிலாங்கூர் பொது நூலகம் இனியும் புத்தகப் பிரியர்களுக்கான பிரத்தியேக மையமாக இருக்காது. மாறாக அதன் செயல்பாடுகள் காலச் சூழலுக்கேற்ப மாற்றம் காணும்.

கடந்தாண்டு இறுதியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்த போது அறிவுக் களஞ்சியங்களாக விளங்கும் இந்த நூலகங்கள் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்கும் தற்காலிக நிவாரண மையங்களாகச் செயல்பட்டன என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மேலும், கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காலத்தில் முன்களப் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு சிலாங்கூர் பொது நூலகக் கழகம் புத்தகங்களை இரவல் வழங்கி உதவியது என அவர் குறிப்பிட்டார்.

நூலகம் என்பது சமூகத்திடமிருந்து விலகி புத்தகங்களுடன் மட்டும் நட்பு கொள்ளும் தரப்பினருக்கானது என்ற கண்ணோட்டத்தை கடந்த 2008 முதல் மாற்றி வருகிறோம். இப்போது இது குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை ஒன்று கூடும் மையமாக விளங்குகிறது என்றார் அவர்.

நூலகங்கள் எல்லாத் தரப்பினரும் நினைவுக்கூறக் கூடிய வகையில் அனைத்து தேவைகளையும் உள்ளடக்கிய மையமாக விளங்குகிறது. இதன் மூலம் நூலகங்கள் நாகரீக வளர்ச்சிக்கான மற்றும் இன வளர்ச்சிக்கான இடமாக எழுச்சி பெற்றுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று இங்குள்ள லீ மெரிடியன் தங்கும் விடுதியில் நடைபெற்ற சிலாங்கூர் பொது நூலக கழகத்தின் வெள்ளி விழா மற்றும் இலக்கியவாதிகள் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.


Pengarang :