ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 5,230 ஆக உயர்வு – ஒன்பது பேர் மரணம்

ஷா ஆலம், ஜூலை 16- நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று ஐயாயிரத்தைத் தாண்டியது. நேற்று மொத்தம் 5,230 பேர் இந்நோய்க்கு இலக்காயினர். அவர்களில் 11 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களாவர்.
நேற்றையத் தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45 லட்சத்து 76 ஆயிரத்து 164 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.
சிலாங்கூரில் மிக அதிகமாக 1,877 பேரும் கோலாலம்பூரில் 1,584 பேரும் இந்நோயினால் பாதிக்கப்பட்ட வேளையில் பேராக்கில் 399 பேருக்கும் சபாவில் 261 பேருக்கும் நெகிரி செம்பிலானில் 236 பேருக்கும் பினாங்கில் 219 பேருக்கும் இந்நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்த நிலையில் மலாக்கா (140), ஜொகூர் (107), புத்ரா ஜெயா (102), கெடா (76), பகாங் (70), சரவா (68), கிளந்தான் (48), திரங்கானு (23) லபுவான் (12), பெர்லிஸ் (8) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
ஆகக் கடைசியாக இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி அதிகமாக அதாவது 5,624 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
நேற்று 2,927 பேர் இந்நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனுடன் சேர்த்து நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 45 லட்சத்து 36 ஆயிரத்து 946 ஆக உயர்ந்துள்ளது.
கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக நேற்று ஒன்பது மரணங்கள் பதிவான வேளையில் இந்நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 35,844 ஆக அதிகரித்துள்ளது.


Pengarang :