ECONOMYNATIONAL

மத்திய அரசின் அவலங்களை மலேசிய இந்தியர் குரல் மக்களிடம் எடுத்துரைக்கும்- பாப்பா ராய்டு சூளுரை

ஷா ஆலம், ஜூலை 18- மத்திய அரசின் பலவீனங்கள் மற்றும் மக்களுக்கு சுமையளிக்கும் வகையிலான செயல்களை மக்களிடம் எடுத்துரைக்கும் பணியில் மலேசிய இந்தியர் குரல் (எம்.ஐ.வி.) தொடர்ந்து ஈடுபடும் என்று அதன் தலைவர் வீ.பாப்பா ராய்டு கூறினார்.

அதிகார வர்க்கத்திடமிருந்து கடும் எதிர்ப்புகள் தோன்றியுள்ள போதிலும் தாங்கள் அஞ்சாது இத்தகைய மக்கள் சந்திப்பு நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தவுள்ளதாக அவர் சொன்னார்.

பினாங்கு, ரவாங் ஆகிய இடங்களுக்கு அடுத்து மூன்றாவது நிகழ்வு ஷா ஆலமில் நடத்தப்படுவதாக கூறிய அவர், இத்தகைய நிகழ்வுகள் மாநிலம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்படும் என்றார்.

நாட்டில் அண்மைய காலமாக பொருள் விலையேற்றம் மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சமையல் எண்ணெய் விலை 5 கிலோ 50.00 வெள்ளியை எட்டிவிட்டது. இதைப் பற்றி கவலைப்படாத அரசாங்கம் மக்களுக்கு உதவுவதாக கூறி பிரிம் என்ற பெயரில் நமது பணத்தையே எடுத்து நமக்கு கொடுக்கிறது. என அவர் குறிப்பிட்டார்.

மத்திய அரசின் இத்தகைய அவலங்களை மக்களிடம் எடுத்துரைத்து அடுத்த பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெறுவதற்கு எம்.ஐ.வி. அயராது பாடுபடும் என்றும் அவர் சொன்னார்.

நேற்று இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடாவில் நடைபெற்ற மலேசிய இந்தியர் குரல் அமைப்பின் ரோட் ஷோ எனப்படும் பிரசார பயணத் தொடர் நிகழ்வில் வரவேற்புரையாற்றிய போது அவர் ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினருமான அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த மலேசிய இந்தியர் குரல் அமைப்பு உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் (இசா) சிறை சென்ற தலைவர்களின் தியாகத்தால் உருவானது. ஹிண்ட்ராப் அமைப்பின் மறு அவதாரமாக விளங்கும் இது இந்தியர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் அடுத்த தலைமுறையினர் இந்நாட்டில் சிறப்பான வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்வதிலும் தொடர்ந்து பங்காற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :