ECONOMYSELANGOR

இந்தியர்களுக்கு சமூக நல உதவிகள் வேண்டாம்- சம அந்தஸ்து வேண்டும்- லிங் குவான் எங் வலியுறுத்து

ஷா ஆலம், ஜூலை 18– இந்திய சமூகத்திற்கு சமூக நல உதவிகள் தேவையில்லை. மாறாக, அவர்களுக்கு இந்நாட்டின் பிரஜைகளுக்குரிய சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று ஜசெக கட்சியின் தலைவர் லிம் குவான் எங் கூறினார்.

மற்ற இனங்களுக்கு ஈடாக மேம்பாட்டைக் காண்பதற்கு ஏதுவாக கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூகவியல் துறைகளில் அச்சமூகத்திற்கு சம மான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சமூக நல உதவிகள் வாயிலாக மட்டும். இந்திய சமூகத்தை உயர்த்தி விட முடியாது. அச்சமூகம் தன்மானத்தோடு சுயகாலில் நிற்பதற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

நேற்று இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடாவில் நடைபெற்ற மலேசிய இந்தியர் குரல் (எம்.ஐ.வி.) அமைப்பின் ரோட் ஷோ எனப்படும் பிரசார பயணத் தொடர் நிகழ்வில் சிறப்புரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஜசெக தலைமையிலான பினாங்கு மாநில அரசாங்கம் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

உறுமிமேளம் போன்ற இந்திய பாரம்பரிய கலைகளின் வளர்ச்சிக்கும் சிறு தொழில் வர்த்தகர்களின் மேம்பாட்டிற்கும் வேண்டிய உதவிகளை மாநில அரசு வழங்கி வருகிறது. இது தவிர மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகள் மற்றும் ஆலயங்களுக்கும் மானியங்களை அளித்து வருகிறோம் என்றார் அவர்.

கடந்தாண்டு டிசம்பரில் சிலாங்கூரில் மோசமான வெள்ளப் பிரச்னை ஏற்பட்ட போது  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பினாங்கு மாநில அரசின் சார்பில் நான்கு கொள்கலன்களில் சுமார் நான்கு லட்சம் வெள்ளி மதிப்புள்ள உதவிப்  பொருள்கள் சிலாங்கூருக்கு அனுப்பினோம்.

இது தவிர, பாதிக்கப்ட்ட இடங்களை துப்புரவு செய்வதற்காக மாநில அரசின் நான்கு தீயணைப்பு வாகனங்களையும் தன்னார்வலர்களையும் இங்கு அனுப்பி உதவினோம். எங்களின் இந்த உதவி கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாட் சாபு மற்றும் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் ஆகியோரின் சுமையைக் குறைக்க உதவி புரிந்தது என்றார் அவர்.


Pengarang :