ECONOMYSELANGOR

சமூக மானிய விண்ணப்பத்திற்கான இறுதி நாள் ஜூலை 29 வரை நீட்டிப்பு- எம்.பி.எச்.எஸ். தகவல்

ஷா ஆலம், ஜூலை 18- உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் இரண்டாம் கட்ட நிலையான சமூக மானியத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கான தேதி வரும் ஜூலை 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்பு இந்த விண்ணப்பத்திற்கான இறுதி நாள் ஜூலை 15 ஆம் தேதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஐம்பாயிரம் வெள்ளித் தொகையை உள்ளடக்கிய இந்த மானியத்திற்கு பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்களில் ஈடுபடும்  சமூக அமைப்புகள், கல்விக் கூடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று நகராண்மைக் கழகத் தலைவர் முகமது ஹஸ்ரி நோர் முகமது கூறினார்.

குறைந்த கார்பன் அளவைக் கொண்ட நகராக உலு சிலாங்கூரை உருவாக்கும் நோக்கத்திற்கேற்பவும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் சமூகத் திட்டங்களுக்கு உதவும் நோக்கிலும் இந்த திட்டம் அமல் செய்யப்படுகிறது என்று அவர் சொன்னார்.

தங்கள் நடவடிக்கைகளின் வாயிலாக புத்தாக்கத்தை பல்வகைப் படுத்துவதற்குரிய வாய்ப்பினை உலு சிலாங்கூர் மக்களுக்கு ஏற்படுத்துவதையும் இத்திட்டம் நோக்கமாக  கொண்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

ஒரு லட்சம் வெள்ளி நிதியில் அமல்படுத்தப்பட்ட முதல் கட்ட சமூக மானியத் திட்டத்திற்கு சமூகப் பிரிவிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுப் சூழல் பிரிவில் 29 விண்ணப்பங்களை நாங்கள் பெற்றோம். இத்திட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் அவர்.


Pengarang :