ANTARABANGSAECONOMY

இந்தோ. பணிப்பெண்கள் தருவிப்பு நிறுத்தம்- ஜாகர்த்தாவுடன் மலேசியா பேச்சு வார்த்தையைத் தொடங்கியது

கோலாலம்பூர், ஜூலை 19- இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண்களைத் தருவிப்பதற்கான அனுமதியை அந்நாட்டு அரசாங்கம் திடீரென முடக்கியது தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது.

இந்தப் பேச்சுவார்த்தையில் குடிநுழைவுத் துறையும் மனித வள அமைச்சும் ஈடுபட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் கூறினார்.

இரு தரப்பிலும் எழுப்பப்பட்ட விவகாரங்கள் மீது இந்த பேச்சுவார்த்தை மையம் கொண்டிருக்கும் எனக் கூறிய அவர், இதில் நீக்குப் போக்கை கடைபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்றார்.

தவறான புரிதல்கள் மற்றும் தொடர்பில் ஏற்பட்ட இடையூறுகளை கூடிய விரைவில் சரி செய்வதை இந்த பேச்சுவார்த்தை நோக்கமாக கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவிலுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர் நிர்வாகம் எப்போதும் சட்டத்தின் அடிப்படையில் இருப்பதையும் ஒவ்வொரு வெளிநாட்டுத் தொழிலாளியும் நாட்டின் சட்டத்தால் முறையாக பாதுகாக்கப்படுவதையும் உள்துறை அமைச்சும் மனிதவள அமைச்சும் உறுதி செய்யும் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன் என்றார் அவர்.

புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் நேற்று வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மேலாண்மை தொடர்பான உள்துறை அமைச்சு மற்றும் மனி வள அமைச்சின் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மலேசியாவுக்கு தொழிலாளர்களை அனுப்புவதை தங்கள் நாடு நிறுத்துவதாக நிறுத்துவதாக மலேசியாவுக்கான இந்தோனேசிய தூதர் ஹெர்மோனோ கடந்த 13 ஆம் தேதி அறிவித்தார்.


Pengarang :