ECONOMYNATIONAL

சுலு சுல்தான் வாரிசுகளின் கோரிக்கை விவகாரம்- நஜிப்புக்கு எதிராக ஷா ஆலம் கெஅடிலான் போலீஸ் புகார்

ஷா ஆலம், ஜூலை 19– முன்னாள் பிரதமரின் அலட்சியம் காரணமாக சுலு சுல்தான் வாரிசுகள் கோரிக்கை வைப்பதற்குரிய சூழல் ஏற்பட்டது தொடர்பில் கெஅடிலான் கட்சியின் ஷா ஆலம் தொகுதி இன்று போலீசில் புகார் செய்தது.

இவ்விவகாரத்தை கையாள்வதில் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் காட்டிய அலட்சியம் காரணமாக நாடு 6,750 கோடி வெள்ளி நிதி கோரிக்கையை எதிர் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக ஷா ஆலம் தொகுதி கெஅடிலான் தலைவர் நஜ்வான் ஹலிம் கூறினார்.

சுலு சுல்தானின் வாரிசுகளுக்கு பணம் செலுத்துவது நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து நஜிப் இவ்விவகாரத்தில் அலட்சியம் காட்டாமல் அரசுக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளைத் தடுத்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது என்று அவர் சொன்னார்.

சுலு சுல்தானின் வாரிசுகள் பதிலடி  கொடுக்கும் வகையில் இவ்விவகாரத்தை அனைத்துலக நிலைக்கு கொண்டுச் சென்று மலேசியாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டனர் என்று இங்குள்ள செக்சன் 9 போலீஸ் நிலைய வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, கெஅடிலான் கட்சியின் இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் முகமது காமில் அப்துல் முனிமும் இதே புகாரை இங்குள்ள போலீஸ் நிலையத்தில் செய்தார்.

சுலு சுல்தான் வாரிசுகளின் கோரிக்கை தொடர்பில் கோத்தா பெலுட் உறுப்பினர் கொண்ட வந்த தீர்மானத்தை நாடாளுமன்றம் நிராகரித்துள்ளதை சுட்டிக் காட்டிய அப்துல் காமில், இவ்விவகாரத்தில் அரசாங்கம் அலட்சியப் போக்கை கடைபிடிப்பது குறித்து தாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறினார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு மேற்கொண்ட சட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுலு சுல்தான் வாரிசுகள் லக்ஸ்ம்பெர்க்கில் பதிவு செய்யப்பட்ட பெட்ரோனாஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான  887 கோடி வெள்ளி மதிப்புள்ள இரு சொத்துக்களை பறிமுதல் செய்தனர்.


Pengarang :