ECONOMYPENDIDIKANSELANGOR

பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு இவ்வாண்டு வெ.69 லட்சம் மானியம்- மாநில அரசு வழங்கியது

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 25- பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு சிலாங்கூர் அரசு இவ்வாண்டு 69 லட்சம் வெள்ளியை  மானியமாக வழங்கியுள்ளது.

கடந்த மே மாதம் 31 ஆம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் அனைத்து மொழிப் பள்ளிகளுக்கும் இந்த மானியம் வழங்கப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பள்ளிகளுக்கான மானியத் திட்டம் 2 கோடியே 60 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டுடன் இவ்வாண்டும் தொடர்கிறது. இந்த உதவித்திட்டத்தின் அடையாள நிகழ்வாக இன்றைய நிகழ்வில் 10 பள்ளிகளுக்கு 20 லட்சம் வெள்ளி மானியம் வழங்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் போலார்ட் சதுக்கத்தில் நடைபெற்ற ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வுக்கு தலைமையேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

தேவையைப் பொறுத்து பள்ளிகளுக்கு வழங்கப்படும் மானியத்தின் அளவு வேறுபட்டிருக்கும். என்றார் அவர்.

நேற்றைய நிகழ்வில் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி, சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி, அசுந்தா இடைநிலைப்பள்ளி, கேத்தலிக் தேசிய இடைநிலைப்பள்ளி டாமன்சாரா சுங் ஹூவா சீனப்பள்ளி உள்ளிட்ட இருபது பள்ளிகள் மந்திரி புசாரிடமிருந்து மானியத்தைப் பெற்றுக் கொண்டன.

மாநிலத்திலுள்ள பள்ளிகளுக்கான இரண்டாம் கட்ட மானிய ஒப்படைப்பு நிகழ்வு வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அமிருடின்  தெரிவித்தார்.

பள்ளிகள் வழங்கும் ஒவ்வொரு விண்ணப்பத்தையும் மாநில அரசு செயலாளர் அலுவலகத்தில் உள்ள மனித வள மேம்பாட்டுப் பிரிவு பரிசீலித்து சான்றளிக்கும். இது தவிர, அந்த விண்ணப்பங்கள் தொடர்பில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தங்கள் ஆலோசனைகளையும் வழங்குவர் என்றார் அவர்.


Pengarang :