ECONOMYSELANGOR

உயிரியல் தொழில்நுட்பத் துறையை பிரபலப்படுத்த மாநில அரசு நடவடிக்கை- டத்தோ தெங் தகவல்

ஷா ஆலம், ஜூலை 25- முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக உயிரியல் தொழில்நுட்பத் துறையை பிரபலப்படுத்தும் நடவடிக்கையை இன்வெஸ்ட் சிலாங்கூர் வாயிலாக மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

உயிரியல் தொழில்நுட்பத்தை வலுப்படுத்துவது மற்றும் அத்தொழில்துறையின் செயல் திட்ட இலக்கின் அமலாக்கத்தை ஒருங்கிணைப்பது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் பல்வேறு தொடர் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தொழில்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

இந்நோக்கத்தின் அடிப்படையில் இன்வெஸ்ட் சிலாங்கூர் ஜொகூர் மற்றும் பினாங்கிற்கு பயணம் மேற்கொண்டு விவசாயம், மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த துணை துறைகளின் பங்கேற்பாளர்களுடன் சந்திப்பு நடத்தியதோடு தொழில் துறையின் சூழியல் முறை மேம்பாட்டில் சம்பந்தப்பட்டுள்ள அரசு துறைகளுடனும் சந்திப்பு நடத்தியது என்று அவர் சொன்னார்.

உயிரியல் தொழில்துறை கோவிட்-19 பெருந்தொற்று பரவலுக்குப் பிறகு பெரும் ஈர்ப்புக்குரிய துறையாக மாறியுள்ளதோடு மாநில பொருளாதாரத்தின் உந்து சக்தியாகவும் விளங்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள முதல் சிலாங்கூர் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்ட துறைகளில் உயிரியல் தொழில்நுட்பத் துறையும் ஒன்றாகும் என அவர் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் இன்று கோல குபு பாரு உறுப்பினர் லீ கீ ஹியோங் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உயிரியல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து லீ கேள்வியெழுப்பியிருந்தார்.


Pengarang :