ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை கடந்த வாரம் அதிகரிப்பு- 63 மரணங்கள் பதிவு

கோலாலம்பூர், ஜூலை 25- நாட்டில் இம்மாதம் 17 முதல் 23 ஆம் தேதி வரையிலான 29வது நோய்த் தொற்று வாரத்தில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை 13.5 விழுக்காடு அதிகரித்து 29,886 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய வாரம் இந்த எண்ணிக்கை 26,335 ஆக இருந்தது.

இக்காலக்கட்டத்தில் உள்நாட்டில் பரவிய நோய்த் தொற்று எண்ணிக்கை 13.5 விழுக்காடு உயர்ந்து 26,317 ஆக ஆன வேளையில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடம் பதிவான எண்ணிக்கை 26.3 விழுக்காடு குறைந்து 28 ஆக ஆனதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கடந்த 29வது நோய்த் தொற்று வாரத்தில் கோவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 18.9 விழுக்காடு உயர்ந்து 22,757 ஆக ஆகியுள்ளது. 28வது நோய்த் தொற்று வாரத்தில் இந்நோயிலிருந்து விடுபட்டவர்கள் எண்ணிக்கை 19,138 பேராக இருந்தது என்று அவர் சொன்னார்.

அதே சமயம், இந்நோயினால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 28வது நோய்த் தொற்று வாரத்தில் 39 ஆக இருந்த வேளையில் கடந்த வாரம் 63ஆக ஏற்றம் கண்டுள்ளது என்றார் அவர்.

இக்காலக் கட்டத்தில் இந்நோய் காரணமாக பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100,000 பேருக்கு 18.3 விழுக்காடாக  உயர்ந்துள்ளது. அதாவது ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்ட நோயாளிகள் எண்ணிக்கை 12.5 விழுக்காட்டு உயர்வையும் மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட நோயாளிகள் எண்ணிக்கை 25 விழுக்காட்டு உயர்வையும் பதிவு செய்தன என்று அவர் குறிப்பிட்டார்.

எனினும், இதர மருத்துவமனைகள் மற்றும் பி.கே.ஆர்.சி. எனப்படும் கோவிட்-19 நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :