ECONOMYSELANGOR

கோம்பாக்கில் நடைபெறும் சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் பல்வேறு சமூக நலத் திட்டங்கள் அறிமுகம்

ஷா ஆலம், ஜூலை 26- மாநில அரசின் புதிய மற்றும் சீரமைக்கப்பட்ட நலத் திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலான ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் இம்மாதம் 31 ஆம் தேதி கோம்பாக்கில் நடைபெறும்.

மாநில அரசின் ஏற்பாட்டிலான இந்நிகழ்வு காலை 8.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை பத்து கேவ்ஸ் பொது திடலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு ஏற்கனவே அம்பாங் ஜெயா தாமான் கோசாஸ், கோல லங்காட் டத்தாரான் பந்தாய் மோரிப், கோல சிலாங்கூர் பிரதான அரங்கம், பெட்டாலிங் ஜெயா ஆகிய இடங்களில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களால் தொடக்கி வைக்கப்படும் இந்நிகழ்வில் கலைஞர்களின் இசைப்படைப்புகள், சமையல் போட்டி, மலர் அலங்காரம், மக்கள் விளையாட்டு, கண்காட்சி, விற்பனை உள்ளிட்ட அங்கங்கள் இடம் பெறும்.

இது தவிர மாநில அரசின் துணை நிறுவனமான சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) வாயிலாக மலிவு விற்பனையும் இங்கு நடைபெறவுள்ளது. இந்த திட்டத்தில் கோழி, முட்டை, இறைச்சி, மீன், சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் மலிவான விலையில் விற்கப்படும்.

மாநில அரசின் வாயிலாக மேலும் அதிகமான மக்கள் பயன்பெறுவதை உறுதி செய்வதற்காக 35 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டில்  இந்த சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

கடுமையான நோய்களை முன்கூட்டியே கண்டறிவதற்கு ஏதுவாக 15 லட்சம் வெள்ளி ஒதுக்கீட்டில் சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வழி நோய்க்கான சாத்தியம் அதிகம் உள்ள தரப்பைச் சேர்ந்த சுமார் 5,000 பேர் பயன்பெறுவர்.


Pengarang :