ECONOMYSELANGOR

நீர் சுத்திகரிப்பு மையம் பராமரிப்பு – உலு சிலாங்கூரில் 188 பகுதிகளில் நீர் விநியோகத் தடை

ஷா ஆலம், ஜூலை 26- வரும் ஆகஸ்டு மாதம் 9 முதல் 11 வரை சுங்கை ராசா நீர் சுத்திகரிப்பு மையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக உலு சிலாங்கூர் மாவட்டத்தின் 188 பகுதிகளில் நீர் விநியோகத் தடை ஏற்படும்.

பயனீட்டாளர்களின் எதிர்கால நலனக்காக இந்த பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் வர்த்தகத் தொடர்பு பிரிவுத் தலைவர் எலினா பஸேரி கூறினார்.

இந்த சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு தாங்கள் தேசிய நீர் ஆணையத்தின் அனுமதியைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக உலு சிலாங்கூர் மாவட்டத்தின் 188 இடங்களில் அட்டவணையிடப்பட்ட நீர் விநியோகத் தடை வரும் ஆகஸ்டு 9 ஆம் தேதி காலை 9.00 மணி தொடங்கி 11 ஆம் தேதி பின்னிரவு 1.00 வரை நீடிக்கும் என அவர் சொன்னார்.

பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் முற்றுப் பெற்றவுடன் 10 ஆம் தேதி பின்னிரவு 1.00 மணி தொடங்கி நீர் விநியோகம் கட்டமாக பயனீட்டாளர்களுக்கு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

வரும் ஆகஸ்டு 11 ஆம் தேதி பின்னிரவு 1.00 மணியளவில் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் நீர் விநியோகம் முழுமையாக சீரடையும்  எனக் கூறிய அவர், இடத்தின் தொலைவு மற்றும் நீர் அழுத்தத்தைப் பொறுத்து நீர் விநியோகம் கிடைக்கும் நேரம் மாறுபடும் என்றார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு லோரிகள் மூலம் நீர் விநியோகம் வழங்கும் பணியில் மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் டயாலிசிஸ் மையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் அவர்.

நீர் விநியோகத் தடை தொடர்பான ஆகக் கடைசி நிலவரங்களை ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் பேஸ்புக், டிவிட்டர், இண்ட்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாகவும் http://www.airselangor.com  எனும் அகப்பக்கம் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம்.


Pengarang :