ECONOMYHEALTHSELANGOR

பி40 தரப்பு சிறார்களுக்கான சத்துணவுத் திட்டம் மாநிலம் முழுமைக்கும் விரிவுபடுத்தப்படும்

ஷா ஆலம், ஜூலை 27– ‘சிலாங்கூர் மைந்தர்கள், ஆரோக்கிய மைந்தர்கள்‘ (அசாஸ்) எனும் திட்டத்தின் கீழ் சிறார்களுக்கு பத்து மாதங்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டம் மாநிலம் முழுமைக்கும் விரிவுபடுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் மத்தியில் வளர்ச்சி குன்றியப் பிரச்னை மற்றும் சத்துணவு குறைபாடு ஏற்படுவதை தடுக்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.

சிலாங்கூரில் சிறார்கள் மத்தியில் சத்துணவு குறைபாடு கடுமையான பிரச்னையாக உள்ளது. ஆகவே, முதல் சிலாங்கூர் திட்டத்தில் இந்த அசாஸ் திட்டத்தை மாநில அரசு மாநிலம் முழுமைக்கும் விரிவுபடுத்துவோம் என்றார் அவர்.

சிறார்கள் மத்தியில் சத்துணவு குறைபாடு பிரச்னையை களைவதன் மூலம் சத்துணவு இல்லாத காரணத்தால் ஏற்படும் நோய்ப் பிரச்னைகளிலிருந்து நீண்டகால அடிப்படையில் தீர்வு காண முடியும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

அசாஸ் திட்டத்தை அமல்படுத்துவதற்கு மாநில அரசு கடந்தாண்டு நவம்பர் மாதம் தாக்கல் செய்த 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 10 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்தது.


Pengarang :