ECONOMYHEALTHSELANGOR

முதல் சிலாங்கூர் திட்டத்தில் சுகாதாரத் துறை வலுப்படுத்தப்படும்- மந்திரி புசார்

ஷா ஆலம், ஜூலை 27– முதல் சிலாங்கூர் திட்டத்தின் வாயிலாக இல்திஸாம் சிலாங்கூர் சேஹாட் (ஐ.எஸ்.எஸ்.) திட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலம் சுகாதாரத் துறையை மாநில அரசு மேலும் வலுப்படுத்தும் என்று மந்திரி புசார் கூறினார்.

விரிவான சுகாதாரத் திட்டத்தைக் கொண்ட ஒரே மாநிலம் என்ற முறையில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

ஐ.எஸ்.எஸ். என்பது குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கான மருத்துவ காப்புறுதித் திட்டமாகும். தனியார் கிளினிக்குகளில் சிகிச்சைப் பெறுவதற்கு உண்டாகும் செலவை குறைக்க இத்திட்டம் உதவுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

குடும்ப பிரிவில் பாலிசி வைத்திருப்போருக்கு ஆண்டுக்கு 500 வெள்ளிக்கும் தனிநபர் பிரிவில் பாலிசி வைத்திருப்போருக்கு ஆண்டுக்கு 400 வெள்ளிக்கும் இத்திட்டத்தின் மூலம் மருத்துவ பாதுகாப்பு வழங்கப்படுகிறது என அவர் விளக்கினார்.

இத்திட்டம் மற்றும் பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் தேவைப்படும் தரப்பினர் சுகாதாரப் பாதுகாப்பை பெறுவதற்குரிய வாய்ப்பினை பெற இயலும் என அவர் சொன்னார்.

மாநிலத்திலுள்ள சுமார் 100,000 பேருக்கு பயன் தரக்கூடிய இந்த ஐ.எஸ்.எஸ். சுகாதார பாதுகாப்புத் திட்டத்தை மந்திரி புசார் கடந்த ஜூலை 2ஆம் தேதி தொடக்கி வைத்தார்.


Pengarang :