ECONOMYSELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெ.13.2 கோடி வெள்ளி நிதியுதவி- சிலாங்கூர் வழங்கியது

ஷா ஆலம், ஆக 1- கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக மாநில அரசு 13 கோடியே 26 லட்சத்து 28 ஆயிரம் வெள்ளியை வழங்கியுள்ளது.

பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 126,041 குடும்பத் தலைவர்கள் தலா 1,000 வெள்ளியைப் பெற்ற வேளையில் இந்த பேரிடரில் உயிரிழந்த 17 பேரின் வாரிசுகளுக்கு தலா 10,000 வெள்ளி வழங்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

வெள்ளம் ஏற்பட்ட குறைந்தது ஒரு மாத காலத்தில் சுமார் 60 விழுக்காட்டு பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியதாக தேசிய புள்ளிவிபரத் துறை கூறுகிறது.

வெள்ளத்தைச் சமாளிக்கவும் வெள்ளத்தில் குவிந்த குப்பைகளை அகற்றவும் மாநில அரசு சிறப்பான முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நிதியுதவி மக்களுக்கு புத்துணர்வையும் ஏற்படுத்தியது. மாநில அரசு வழிகாட்டியாக இருந்து செயல்பட்ட வேளையில் ஆட்சிக்குழு உறுப்பினர்களும் கடுமையாகப் பாடுபட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள் குறித்து சுங்கை பூரோங் உறுப்பினர் டத்தோ சம்சுடின் லியாஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.

இது தவிர வெள்ளத்திற்குப் பிந்தைய தடுப்புத் திட்டங்களை மேற்கொள்ள மாநில அரசு 3 கோடியே 10 லட்சம் வெள்ளியைச் செலவிட்டுள்ளதையும் அமிருடின் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, சிலாங்கூர் –நெகிரி செம்பிலான் மாநில எல்லையில் நிலச்சரிவினால் ஏற்பட்ட போக்குவரத்து இடையூறு பிரச்னைகளை சரி செய்வதும் அதில் அடங்கும் என்றார் அவர்.


Pengarang :