ECONOMYSELANGOR

முதலாவது சிலாங்கூர் திட்டத்தை மாநில சட்டமன்றம் அங்கீகரித்தது

ஷா ஆலம், ஆக 2- ஐந்தாண்டுகளுக்கான (2021-2025) முதலாவது சிலாங்கூர் திட்டம் மீதான தீர்மானத்தை மாநில சட்டமன்றம் இன்று அங்கீகரித்தது.

கடந்த வியாழக்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த பொருளாதாரத் திட்டம் தொடர்பான விவாதத்திற்குப் பின்னர் அவை உறுப்பினர்கள் அதனை ஏற்றுக் கொண்டதாக மாநில சட்டமன்ற சபாநாயகர் இங் சுயி லிம் கூறினார்.

மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு உந்து சக்தியாக விளங்கக்கூடிய இந்த முதலாவது மலேசியத் திட்டம் தொடர்பான விவாதத்தில் கோத்தா அங்கிரிக் உறுப்பினர் நஜ்வான் ஹலிமி, பண்டார் உத்தாமா உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புக்கிட் லஞ்சான் உறுப்பினர் எலிசெபத் வோங், தாமான் மேடான் உறுப்பினர் ஷம்சுல் பிர்டாவுஸ் முகமது சுப்ரி தாமான் டெம்ப்ளர் உறுப்பினர் முகமது சானி ஹம்சான் ஆகியோரும் இந்த விவாதத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களாவர்.

முதலாவது சிலாங்கூர் திட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் 27 ஆம் தேதி மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.

மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான கொள்கை அமலாக்கம், திட்டங்கள் நன்முயற்சிகள் ஆகிய அம்சங்களை இந்த திட்டம் விரிவான அளவில் உள்ளடக்கியுள்ளது.

சிலாங்கூருக்கு தொடர்ந்து பங்களிப்பை வழங்கி வரம் 12வது மலேசியத் திட்டத்தைப் புறந்தள்ளும் நோக்கத்தை இந்த முதலாவது சிலாங்கூர் திட்டம் கொண்டிருக்கவில்லை என்று அமிருடின் குறிப்பிட்டார்.


Pengarang :