ECONOMYSELANGOR

சிலாங்கூரில் வெ.1,600 குறைந்த பட்ச சம்பளம் 1,600- கோத்தா டாமன்சாரா உறுப்பினர் பரிந்துரை

ஷா ஆலம், ஆக 3- முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் குறைந்த பட்ச சம்பள விகிதம் 1,600 வெள்ளியாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று கோத்தா டாமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரைத்துள்ளார்.

தொழிலாளர்கள் மற்றும் பொது மக்களை கடுமையாகப் பாதித்து வரும் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு இந்த சம்பளத் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று ஷாதிரி மன்சோர் கூறினார்.

குறைந்த சம்பளத்தை 1,600 வெள்ளியாக நான் பரிந்துரைக்கிறேன். இதனை அமல்படுத்துவதில் சிலாங்கூர் முன்னோடியாக விளங்கும் என நம்புகிறேன். ஆகவே, இவ்விவகாரத்தை மாநில அரசு விரிவாக ஆராயும் என எதிர்பார்க்கிறேன் என்றார் அவர்.

இந்த திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் தொழிலாளர்களை காக்க முடியும் என்பதோடு வேலையில்லாத் திண்டாட்டத்தையும் குறைக்க இயலும் என்று மாநில சட்டமன்றத்தில் அவர் தெரிவித்தார்.

தொழிலாளர்களின் நலனை காப்பதற்காக சிலாங்கூர் தொழிலாளர் ஆக்கத்திறனளிப்பு பிரிவை உருவாக்கிய முதல் மாநிலமாக விளங்கும் சிலாங்கூருக்கு தாம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் சொன்னார்.

அநீதி இழைக்கப்படும் தொழிலாளர்களுக்கு குறிப்பாக, தொழிலியல் உறவுச் சட்டத்தின் 20வது பிரிவின் கீழ் பாதிக்கப்படுவோருக்கு உதவி வழங்குவதில் மாநில அரசின் சட்ட உதவி நிதி பெரிதும் துணை புரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மொத்தம் 21,244 கோடி வெள்ளியை உட்படுத்திய முதலாவது சிலாங்கூர் திட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் 27ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.


Pengarang :