ECONOMYSELANGOR

சிப்பாங், கோல லங்காட் முதலீட்டு ஊக்குவிப்பு பரிந்துரைகள் மீது சிலாங்கூர் அரசு பரிசீலனை

ஷா ஆலம், ஆக 3- சுமார் ஒரு ட்ரிலியன் வெள்ளி மதிப்பிலான தென் சிலாங்கூர் ஒருங்கிணைந்த மேம்பாட்டு பிரதேச திட்டத்திற்கான நான்கு முதலீட்டு ஊக்குவிப்பு பரிந்துரைகளை மாநில அரசு பரிசீலித்து வருகிறது.

சிறப்பு பிரீமியத் திட்டம், காலி நிலங்களுக்கான மதிப்பீட்டு வரி விலக்களிப்பு, சான்றிதழ் உறுதிப்படுத்தப்பட்டப் பின்னர் விதிக்கப்படும் வரிக்கு 50 விழுக்காட்டு கழிவு, ஐந்தாண்டுகளுக்கு லைசென்ஸ் கட்டண விலக்களிப்பு ஆகியவை அந்த ஊக்குவிப்பு பரிந்துரைகளாகும் என்று முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

இந்த பரிந்துரைகள் யாவும் தற்போது ஆய்வு கட்டத்தில் உள்ளதாக கூறிய அவர், மாநில அரசின் ஒப்புதல் கிடைத்தப் பின்னர் அது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.
மாநில சட்டமன்றத்தில் நேற்று முதலாவது சிலாங்கூர் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது வரை 10 திட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் என்.சி.டி. ஸ்மார்ட் இண்டாஸ்ட்ரியல் பார்க் மற்றும் சிப்பாங் கோல்ட் கோஸ்ட் குளோபல் வில்லேஜ் ஆகிய இரு திட்டங்கள் திட்டமிடல் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

இந்த பத்து திட்டங்களோடு மட்டும் இது நிறுத்தப்படாது எனக் கூறிய அவர், சிப்பாங் மற்றும் கோல லங்காட்டை மேம்படுத்த விரும்பும் மேம்பாட்டாளர்களிடமிருந்து கிடைக்கும் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்றார்.

நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை அப்பரிந்துரைகள் கொண்டிருக்கும் பட்சத்தில் அவற்றை நாங்கள் வரவேற்க தயாராக உள்ளோம். மாநில அரசின் ஒருங்கிணைப்பும் கண்காணிப்பும் இருக்கும் பட்சத்தில் அப்பகுதி துரித மேம்பாடு காணும் என நம்புகிறோம் என்று அவர் சொன்னார்.


Pengarang :