ECONOMYSELANGOR

2020 முதல் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையில் ஷா ஆலம் அரங்கம்- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், ஆக 4- கூரைப் பகுதி மோசமாக சேதமடைந்த காரணத்தால் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலையில் ஷா ஆலம் அரங்கம் உள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அந்த அரங்கம் பாதுகாப்பானதாக இல்லை என்று மலேசிய கால்பந்து சங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு தெரிவித்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு அறிக்கையை அடிப்படையாக கொண்டு இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான வழியை மாநில அரசு ஆராய்ந்ததாக அவர் சொன்னார்.

அந்த அறிக்கை நிறுவன மதிப்பீடு அல்ல. மாறாக சிலாங்கூர் மாநில பொதுப்பணித் இலாகா தலைமையில் மாநில அரசு உருவாக்கிய சிறப்பு குழுவினால் அது தயாரிக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

கூரைகள் வலுவாக இல்லாத காரணத்தால் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அந்த அரங்கு பயன்படுத்தப்படவில்லை. அதற்கு முன்னர் மலேசிய கிண்ணம், சிலாங்கூர் சுல்தான் கிண்ணம் போன்ற போட்டிகள் அங்கு நடைபெற்று வந்தன என்றார் அவர்.

கடந்த செவ்வாய்க்கிழமை மாநில சட்டமன்றத்தில் முதலாவது சிலாங்கூர் திட்டம் மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

சீ போட்டிகளை நடத்துவதற்காக மாநில அரசு கடந்த 2017 ஆம் ஆண்டில் சுமார் 600,000 வெள்ளி செலவில் அந்த அரங்கை புதுப்பித்ததாக அவர் மேலும் சொன்னார்.

இத்திட்டத்தை மேற்கொள்ள மத்திய அரசு 400,000 வெள்ளியை வழங்க முன்வந்தது. எனினும் நாங்கள் சொந்த பணத்தில் அந்த புனரமைப்பு பணியை மேற்கொண்டோம் என கூறினார்.


Pengarang :