ECONOMYNATIONAL

பாரிசான் எம்.பி. மகன் வாகனத்திற்கு ரோந்து பாதுகாப்பு- இரு போலீஸ்காரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

ஷா ஆலம், ஆக 4- தேசிய முன்னணி  (பாரிசான் நேஷனல்) நாடாளுமன்ற உறுப்பினர் மகனின் வாகனத்திற்கு பாதுகாப்பாக ரோந்து சென்ற இரு போக்குவரத்து போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 7 ஆம் தேதி முதல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்த 20 விநாடி காணொளியை ஆய்வு செய்தப் பின்னர் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் நாடாளுமன்றத்தில் கூறினார்.

ஜோர்ஜ் டவுன், ஜாலான் புக்கிட் கம்பீர் சாலையில் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் என நம்பப்படும் நபரின் வாகனத்திற்கு பாதுகாப்பாக போலீஸ் துறைக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்றது தொடர்பில் அவ்விரு போலீஸ்காரர்களுக்கு எதிராக பினாங்கு போலீசார் ஏற்கனவே விசாரணை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் 1993 ஆம் ஆண்டு பொதுத் துறை அதிகாரிகளுக்கான (நடத்தை மற்றும் கட்டொழுங்கு) விதியின் கீழ் அவ்விருவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.

அந்த நபரின் வாகனத்துடன் உடன் செல்வதற்கு அவ்விரு போலீஸ்காரர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக பணி உத்தரவு வழங்கப்படவில்லை என்று பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ சுஹாய்லி முகமது ஜைன் முன்னதாக கூறியிருந்தார்.


Pengarang :