ECONOMYSELANGOR

சிலாங்கூர் மாநில பி.கே.ஆர். தலைவராக அமிருடின் மீண்டும் தேர்வு- ரபிஸி கூ.பிரதேச தலைவரானார்

ஷா ஆலம், ஆக 4- சிலாங்கூர் பி கே.ஆர். கட்சியின் மாநிலத் தலைமைத்துவ மன்றத் தலைவராக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மீண்டும் தேர்வாகியுள்ள நிலையில் கூட்டரசு பிரதேச தலைவராக  பி.கே.ஆர். கட்சியின் தேசிய துணைத் தலைவர் ரபிஸி ரம்லி நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இங்கு நடைபெற்ற சிலாங்கூர் மற்றும் கூட்டரசு பிரதேச தொகுதி  தலைவர்களுடனான சந்திப்பு  கூட்டத்தில்  இந்த நியமனம் இறுதி செய்யப்பட்டதாக கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இந்தச் சந்திப்பின்போது ​மாநிலத் தலைமைத்துவ மன்றத்  தலைவராக அமிருடின் ஷாரியை நியமிக்க அனைத்து சிலாங்கூர் பிரிவுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

இதற்கிடையில் அனைத்து கூட்டரசு பிரதேச தொகுதித் தலைவர்களும் மாநில தலைமைத்துவ மன்றத் தலைவராக ரபிஸி ரம்லி நியமிக்கப்படுவதை ஏற்றுக் கொண்டனர்  என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

வரவிருக்கும் 15வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள பி.கே.ஆ. கட்சியின் தேர்தல் இயந்திரத்தை விரைவுபடுத்த இந்த இரண்டு நியமனங்களும் உதவும் என்று தாம் நம்புவதாக அன்வார் கூறினார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சிலாங்கூர் பி.கே.ஆர். தலைமைத்துவ மன்றத் தலைவர் பதவியை அமிருடின் வகித்து வருகிறார்.  அதே நேரத்தில் ரபிஸி, கடந்த  ஜூன் மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற கட்சித் தேர்தலில் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


Pengarang :