ECONOMYNATIONAL

வெளிநாட்டில் மலேசிய தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு பிரஜையாகும் தகுதி கிடையாது- மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

புத்ரா ஜெயா, ஆக 5- வெளிநாட்டு ஆடவர்களைக் திருமணம் செய்து வெளிநாட்டில் பிரசவிக்கப்பட்ட மலேசிய  தாய்மார்களின் குழந்தைகள் மலேசிய பிரஜைகளாக ஆவதற்கான சட்டப்பூர்வ உரிமை கிடையாது என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று  2-1 என்ற பெரும்பான்மையில் தீர்ப்பளித்தது.

மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டத்தோ கமாலுடின் முகமது சைட் தலைமையிலான மூவரடங்கிய அமர்வு மலேசிய அரசாங்கம், உள்துறை அமைச்சு மற்றும் தேசிய பதிவுத் துறை தலைமை இயக்குநரின் மேல் முறையீட்டை ஏற்றுக் கொண்டு இத்தீர்ப்பை வழங்கியது.

நீதிபதிகள் டத்தோ கமாலுடின் மற்றும் டத்தோ அஜிசா நவாவி இந்த முடிவை ஆதரித்த வேளையில் நீதிபதி டத்தோ எஸ்.நந்தபாலன் அதனை ஆட்சேபித்தார்.

முன்னதாக, கடந்த 2021 ஆம் ஆண்டில் மேற்கண்ட மூன்று பிரதிவாதிகளுக்கும் எதிரான தீர்ப்பை சிலாங்கூர், கோலாலம்பூர் குடும்ப உதவி மற்றும் சமூக நலன் சங்கம் மற்றும் வெளிநாட்டினரை திருமணம் செய்து கொண்டதன் மூலம் குழந்தைகளுக்கு தாயான ஆறு மலேசியர்கள்  கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் பெற்றிருந்தனர்.


Pengarang :