ECONOMYHEALTHSELANGOR

உடலாரோக்கியத்தை அன்றாடம் விவாதிக்கும் விஷயமாக்கிக் கொள்வீர்- சித்தி மரியா வேண்டுகோள்

ஷா ஆலம், ஆக 8– உடலாரோக்கியம் மீதான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரிப்பதற்கு ஏதுவாக நமது அன்றாட வாழ்வில் நடக்கும் விவாதங்களில் சுகாதாரம் முக்கிய கருப்பொருளாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலவச மருத்துவப் பரிசோதனையை மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் அத்தகைய சோதனைகளை மேற்கொள்வதற்கு பெரும்பாலானோர் இன்னும் அஞ்சுகின்றனர் என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

உடலாரோக்கியம் என்பது விலைமதிக்க முடியாத சொத்து என்பதை மக்கள் உணர வேண்டும். இது இஸ்லாத்திலும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள கோத்தா கெமுனிங் எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்தில் நேற்று நடைபெற்ற சுங்கை கண்டீஸ் தொகுதி நிலையிலான இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கத்தைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் அடிப்படையில், மக்கள் உடலாரோக்கியம் குறித்து ஒவ்வொரு நாளும் விவாதிக்க வேண்டும். உதாரணத்திற்கு இருதய நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றை உள்ளடக்கிய நோய்த் தொகுப்பு குறித்த அவர்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். அன்றாட விவாதத்தில் சுகாதாரம் ஒரு முக்கிய கருப்பொருளாகும் பட்சத்தில் மக்கள் மத்தியில் நோய்களுக்கு எதிரான விழிப்புணர்வு அதிகரிக்கும் என்றார் அவர்.

உடலாரோக்கியத்தை பேணிக் காப்பதன் அவசியத்தை மக்கள் மத்தியில் உணர்த்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கத்தை மாநில அரசு நடத்துவதாகவும் அவர் கூறினார்.

இள வயதில் உடலாரோக்கியம் மீது கவனம் செலுத்தாமல் வயது முதிர்ந்த காலத்தில் மக்கள் சிரமப்படுவதைக் காண அரசு விரும்பவில்லை என்று அவர் சொன்னார்.


Pengarang :