ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19  இருவாரங்களில் நோய்த் தொற்று மற்றும் மரண எண்ணிக்கை உயர்வு

கோலாலம்பூர், ஆக 8- கடந்த ஜூலை மாதம் 31 முதல் ஆகஸ்டு 6 ஆம் தேதி வரையிலான 31வது நோய்த் தொற்று வாரத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 0.8 விழுக்காடு அதிகரித்து 28,554 ஆக அதிகரித்துள்ளது.

அவற்றில் 28,499 சம்பவங்கள் உள்நாட்டினர் மூலம் பரவிய வேளையில் எஞ்சிய 55 சம்பவங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டன.

இந்த 31வது நோய்த் தொற்று வாரத்தில் கோவிட்-19 நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கையும் 22.4 விழுக்காடு அதிகரித்து 60 ஆக உயர்வு கண்டுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கடந்த வாரம் நோயிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7.2 விழுக்காடு வீழ்ச்சி கண்டு 28,604 ஆக ஆகியுள்ளது. அதற்கு முந்தைய வாரம் அதாவது 30 வது நோய்த் தொற்று வாரத்தில் இந்த எண்ணிக்கை 30,837 ஆக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நோயின் தீவிர தாக்கத்தை எதிர்நோக்கியுள்ளவர்களின் சராசரி எண்ணிக்கை 31வது நோய்த் தொற்று வாரத்தில் 2.6 விழுக்காடு குறைந்து 45,941 ஆக ஆனதாக கோவிட்-19 நோய்த் தொடர்பில் இன்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.

இதனிடையே, இந்நோய் காரணமாக மருத்துவமனை மற்றும் பி.கே.ஆர்.சி. எனப்படும் சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 100,000 பேருக்கு 12 பேராக தொடர்ந்து உள்ளது என்றார் அவர்.

அதே சமயம். மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டில்களின் பயன்பாடு 14 விழுக்காடாகவும் பி.கே.ஆர்.சி. மையங்களில் 2 விழுக்காடாகவும் உள்ளதாக அவர் மேலும் கூறினார்.


Pengarang :