ECONOMYSELANGOR

சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிய படகு கவிழ்ந்தது- ஒருவர் பலி, 35 பேர் மீட்பு

ஷா ஆலம், ஆக 9- நேற்று அதிகாலை சிலாங்கூர் கடல் பகுதி வழியாக நாட்டிற்குள் நுழைய முயன்ற சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிருந்த படகு கவிழ்ந்தது. கடலில் தத்தளித்தவர்களை அவ்வழியே வந்த தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல் மீட்டது.

இச்சம்பவத்தில் 35 பேர் காப்பாற்றப்பட்ட வேளையில் ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று மலேசிய கடல் அமலாக்க நிறுவனத்தின் (ஏ.பி.எம்.எம்.) சிலாங்கூர் மாநில இயக்குநர் கேப்டன் வி. சிவகுமார் கூறினார்.

இந்த விபத்து தொடர்பான தகவலை ஜொகூர் பாரு கடல் துணை மீட்பு மையத்திடமிருந்து  அதிகாலை 2.23 மணியளவில் தமது தரப்பு பெற்றதாக அவர் சொன்னார்.

இதனைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக சிலாங்கூர் ஏ.பி.எம்.எம்.மின் பெர்க்காசா 36 படகு, அரச மலேசிய கடற்படை படகு ஆகியவை சம்பவ இடத்திற்கு விரைந்தன என்று அவர் தெரிவித்தார்.

இந்நடவடிக்கையின் போது 22 முதல் 51 வயது வரையிலான 28 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் அடங்கிய 35 சட்டவிரோதக் குடியேறிகள் அந்த எண்ணெய்க் கப்பலிலிருந்து அமலாக்கப் பிரிவினரின் படகுகளுக்கு மாற்றப்பட்டனர். இச்சம்பவத்தில் உயிரிழந்த ஆடவரின் சடலத்தை எண்ணெய்க் கப்பல் சிப்பந்திகள் மீட்டனர் என்றார் அவர்.

இந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தை துல்லியமாக அடையாளம் காணும் பணியில் தாங்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :