ECONOMYSELANGOR

பிங்காஸ் சரியான தருணத்தில் அமல்படுத்தப்பட்ட திட்டம் – பொது மக்கள் புகழாரம்

ஷா ஆலம், ஆக 10– விலைவாசி உயர்வால் மக்கள்  பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் மாநில அரசின்  சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டம்  (பிங்காஸ்) சரியான நேரத்தில் உருவாக்கப்பட்ட திட்டமாக கருதப்படுகிறது.

மக்களுக்கு, குறிப்பாக வசதி குறைந்தவர்களுக்கு கோவிட்-19 தொற்றுநோய்த் தொற்றுக்குப் பின்னர் உதவி அதிகம் தேவைப்படுகிறது என்று என்று ரோசானி அப்துல்லா (வயது 39) என்ற குடும்ப மாது கூறினார்.

நான் ஆசிரியராகப் பணிபுரிந்தாலும் பொருட்களின் விலையேற்றம் எனக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறைந்த வருமானம் பெறும் தரப்பினரின் நிலையைச் சொல்லத் தேவையில்லை.

சில நேரங்களில் போக்குவரத்துச் செலவை தாங்க முடியாமல் பள்ளிக்குச் செல்ல முடியாத அவலநிலை மாணவர்களுக்கு ஏற்படுவது குறித்து நான் அனுதாபப்படுகிறேன் என்றார் அவர்.

சிலாங்கூர் அரசாங்கத்தின் இந்த முன்னெடுப்பு கோவிட்-19க்குப் பிறகு வாழ்க்கையை நடத்துவதில் பெரும் போராட்டத்தை எதிர்நோக்கி வரும் மக்களுக்கு பேருதவியாக உள்ளதாக முகமது ரஹிதி முஹம்மது தெரிவித்தார்.

போதிய சம்பளம் இல்லாததால் கூடுதல் வருமானம் ஈட்ட வார இறுதி நாட்களில் பகுதி நேர வேலை செய்ய நேரிட்டதாக இரண்டு குழந்தைகளின் தந்தையான அவர் சொன்னார்.

இந்த முயற்சியை நான் வரவேற்கிறேன். ஏனெனில் இது மக்களின் சுமையை குறைக்கிறது. லாரி ஓட்டுநராக வேலை செய்யும் எனக்கு வருமானம் போதாது. ஆனால் விரும்பியோ விரும்பாமலோ பிழைப்புக்காக  இதனைத் தொடர வேண்டியுள்ளது என்றார் அவர்.

நானும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யவுள்ளேன். அது அங்கீகரிக்கப்படும் என்று நம்புகிறேன். குறைந்தபட்சம் எனது மாதச் செலவுகளையாவது என்னால் ஈடுகட்ட முடியும் என்று இங்குள்ள கம்போங் பாடாங் ஜாவாவில் வசிக்கும் அவர் கூறினார்.

இதற்கிடையில், ஹஸ்லின் சம்சுடின் (வயது 39) என்ற இல்லத்தரசி கூறுகையில் தனது இரண்டு குழந்தைகளுக்கு பள்ளி உபகரணங்களைத் தவிர மற்ற தேவைகளை வாங்குவதற்கு இந்த உதவி பயன்படுத்தப்படலாம் என்று கூறினார்.


Pengarang :