ECONOMYSELANGOR

நீர் சுத்திகரிப்பு மையத்தில் பணி நிறுத்தம்- பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாற்று வழிகளில் நீர் விநியோகம்

ஷா ஆலம், ஆக 11- லங்காட்-2 நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று காலை தொடங்கி நீர் சுத்திகரிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு குறிப்பாக அதிமுக்கிய மையங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் நீரை விநியோகிக்கும் நடவடிக்கையை பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

மூன்று பிராந்தியங்களில் உள்ள 397 இடங்களில் ஏற்பட்டுள்ள நீர் விநியோகத் தடை காரணமாக ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்காக தமது தரப்பு சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அந்நிறுவனம் கூறியது.

அந்த நீர் சுத்திகரிப்பு மையம் இன்று மாலை 3.30 மணியளவில் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்றும் அதன் பின்னரே நீரை சுத்திகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அறிக்கை ஒன்றில் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் தெரிவித்தது.

நீர் விநியோக பகிர்வு முறை நிலைப்படுத்தப்பட்டவுடன் சுத்திகரிக்கப்பட்ட நீரை பயனீட்டாளர்களுக்கு விநியோகிக்கும் பணி கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என் அவ்வறிக்கை குறிப்பிட்டது.

கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையின் 75.9வது கிலோ மீட்டரில் கோலாலம்பூர் நோக்கிச் செல்லும் தடத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக பகாங் மாநிலத்தின் செமென்தான் ஆற்றில் இரசாயனம் கலந்தது.

இச்சம்பவம் காரணமாக ஏற்பட்ட நீர் விநியோகத் தடையினால் பெட்டாலிங் கோலாலம்பூர் மற்றும் உலு லங்காட் ஆகிய மூன்று பிராந்தியங்களில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.


Pengarang :