ECONOMYHEALTHSELANGOR

வார இறுதியில் மூன்று தொகுதிகளில் இலவச மருத்துவ பரிசோதனை

ஷா ஆலம், ஆக 11- சிலாங்கூர் அரசின் ஏற்பாட்டிலான இலவச மருத்துவ பரிசோதனை இயக்கம் இம்மாதம் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் மூன்று சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறவுள்ளது.

கோத்தா டாமன்சாரா தொகுதி நிலையிலான மருத்துவ பரிசோதனை இயக்கம் வரும் 13 ஆம் தேதி சனிக்கிழமை செக்சன் யு6, டேவான் ரோஸால் எம்.பி.எஸ்.ஏ.வில் நடைபெறும்.

கோத்தா அங்கிரிக் தொகுதிக்கான மருத்துவ பரிசோதனை இயக்கம் டேவான் ராஃக்லிஷியா எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்திலும் ரவாங் தொகுதி நிலையிலான பரிசோதனை ரவாங், பத்து 17, தெராத்தாய் மண்டபத்திலும் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

உடலாரோக்கியத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் பொது மக்களுக்கு உணர்த்தும் நோக்கில் இந்த பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்படுவதாக சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

வாழ்க்கைச் செலவினம் தொடர்ந்து அதிகரித்து வருவதை நாம் அனைவரும் அறிவோம். மருத்துவச் சிகிச்சைக்கான செலவுகளும் உயர்வு கண்டு வருகின்றன. நியாயமாக பார்த்தால் இந்த இலவச பரிசோதனை இயக்கம் பெரும் தொகையை உள்ளடக்கியுள்ளதையும் மாநில அரசின் முழு அக்கறையையும் உணர முடியும் என அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநில அரசு அமல்படுத்தியுள்ள திட்டங்களில் இதுவே மிகச் சிறந்தது என்றால் அது மிகையில்லை என்று என்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் இந்த இலவச மருத்துவ பரிசோதனைத் இயக்கத்தை நடத்துவதற்கு மாநில அரசு 34 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் 39 ஆயிரம் பேர் வரை பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :