ECONOMYNATIONAL

அதிகாரப்பூர்வ பணிகளில் மலாய் மொழியின் பயன்பாட்டை துறைத் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும்

புத்ரா ஜெயா, ஆக 11- பொதுச் சேவைத் துறையில் மலாய் மொழியின் பயன்பாட்டை மேலும் வலுப்படுத்துவதற்கு ஏதுவாக அதிகாரப்பூர்வ பணிகளில் மலாய் மொழி முழுமையாகப் பயன்படுத்தப்படுவதை சம்பந்தப்பட்ட துறைகளின் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மனித வள சுற்றறிக்கையில் இது குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொதுச் சேவைத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது ஷாபின் அப்துல்லா கூறினார்.

மலாய் மொழியின் பயன்பாடு தொடர்பான உத்தரவு முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அதற்கான வசதிகள், மொழி பெயர்ப்புகள் மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவை உள்ளிட்ட நடவடிக்கைகள் ஆக்ககரமான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

துறை சார்ந்த பணியாளர்கள் அனைவரும் பேசுவதிலும் எழுதுவதிலும் உயர்ந்த பட்ச ஆற்றலைக் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தேவையின் அடிப்படையில் கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் தணிக்கை தொடர்ந்தாற் போல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதன் தொடர்பான பிரசுரங்கள் அனைத்து மாநில பொதுச் சேவைத் துறைகள் மற்றும் ஊராட்சி மன்றங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :