ECONOMYSELANGOR

தேசிய கொடிகளை விநியோகிக்க மானியத் தொகையைப் பயன்படுத்துவீர்- சடடமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை

ஷா ஆலம், ஆக 18- வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்படும் தேசிய தினத்திற்காக தேசிய கொடிகளை விநியோகிப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை  தயார் செய்யுமாறு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த வரலாற்றுப்பூர்வ தினத்தின் கொண்டாட்டத்தை உயிர்ப்பிப்பதற்கும் சமூகத்தின் மத்தியில் தேசபக்தியை  ஊக்குவிப்பதற்கும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கலாசாரம் மற்றும் பாரம்பரியத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்  கூறினார்.

மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 600,000 முதல் 800,000 வெள்ளி வரை ஒதுக்கீடு பெறுகின்றனர். கொடிகளை வாங்குவதற்கு  தற்போதுள்ள ஒதுக்கீட்டில் சிறிது தொகையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். கொடிகளை வாங்க 10,000 வெள்ளிகூட செலவு பிடிக்காது என்று பொர்ஹான் அமான் ஷா கூறினார்.

அதேபோல், கிராம சமூக நிர்வாக மன்றத் தலைவர்களும் இதைச் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அதிகம் இல்லை, 500 வரை  மட்டுமே செலவழிக்கலாம் என்று அவர் சொன்னார்.

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகளாக நம்மால் கொண்டாட முடியவில்லை. இந்த ஆண்டு சுதந்திரத்தை கொண்டாட அனைத்து தரப்பினரும் தேசிய கொடியை பறக்க விடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார் அவர்.

Pengarang :