ECONOMYNATIONAL

நான்கு கோடி வெள்ளி பொருள்களை கடத்தும் முயற்சியை சுங்கத் துறை முறியடித்தது

ஷா ஆலம், ஆக 26- அண்மையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சோதனைகளின் வழி அரச மலேசிய சுங்கத் துறையின் மத்திய பிராந்திய இரண்டாம் பிரிவு (சிலாங்கூர்) வெண் சிகிரெட்டுகள், மதுபானங்கள் மற்றும் உறைய வைக்கப்பட்ட இறைச்சிகளை பறிமுதல் செய்தது.

பறிமுதல் செய்யப்பட்ட இந்த பொருள்களின் சுங்க மற்றும் கலால் வரியுடன் சேர்த்த மொத்த மதிப்பு 3 கோடியே 85 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளியாகும்.

சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் இந்த பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக அத்துறையின் உதவி தலைமை இயக்குநர் முகமது சப்ரி சஹாட் கூறினார்.

கைப்பற்றப்பட்ட அந்த பொருள்களின் மதிப்பு 50 லட்சத்து 2 ஆயிரத்து 587 வெள்ளி 60 காசு ஆகும். இதற்கான சுங்க மற்றும் கலால் வரி 3 கோடியே 35 லட்சத்து 87 ஆயிரத்து 357 வெள்ளி 90 காசாகும் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

கிள்ளான் துறைமுகம் மற்றும் சிரம்பான் தாமான் ஐடியல் டவுன்ஷிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 33 லட்சத்து 64 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 4 கோடியே 20 லட்சத்து 60 ஆயிரம் வெண் சிகிரெட்டுகள் கைப்பற்றப்பட்டன என்றார் அவர்.

மொத்தம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 698.92 லிட்டர் மதுபானங்கள் அச்சோதனை நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறிய அவர், இதன் மதிப்பு 941,265 வெள்ளியாகும் என்றார்.

பண்டமாரான் பி.கே.என்.எஸ். தொழில்பேட்டைப் பகுதியில் கைவிடப்பட்ட டிரெய்லர் லோரி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 696,500 வெள்ளி மதிப்புள்ள 27,860 கிலோ உறைய வைக்கப்பட்ட இறைச்சி கண்டு பிடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :