ECONOMYNATIONAL

ஹராப்பான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேலும் பல ஊழல்வாதிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவர்

உலு லங்காட், ஆக 26- மேலும் அதிகமான ஊழல்வாதிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதற்கு ஏதுவாக வரும் பொதுத் தேர்தலில் மக்கள் தொடர்ந்து தங்களுக்கு வாக்களிப்பார்கள் என பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி எதிர்பார்க்கிறது.

பக்கத்தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்கள் மற்றும் நாட்டின் நலனோடு உயர் நெறி தொடர்பான விவகாரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அமானா நெகாரா கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சலாவுடின் ஆயோப் கூறினார்.

மக்களின் வாக்குகளைப் பெறுவதன் மூலம் தற்போது அமைச்சர்களாக இருப்பவர்கள் உள்பட அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட மேலும் பலர் தண்டிக்கப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2018 பொதுத் தேர்தலில் பொது மக்கள் பக்கத்தான் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்காது போயிருந்தால் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது குற்றஞ்சாட்ட முடியாமல் போயிருக்கும் என்றார் அவர்.

நேற்று பாங்கியில் நடைபெற்ற பாரிசானை நிராகரிப்போம் பயணத் தொடர் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஹராப்பான் கூட்டணியின் தகவல் பிரிவுத் தலைவர் ஃபாமி ஃபாட்சில் மற்றும் அமானா கட்சித் தலைவர் மாட் சாபு ஆகியோரும் கலந்து  கொண்டனர்.

ஹராப்பான் தலைசிறந்த தலைமைத்துவத்தைக் கொண்டிருப்பதால் அந்த கூட்டணியால் நாட்டை வெகு சிறப்பாக வழி நடத்த முடியும் என்றும் அவர் சொன்னார்.

கடந்த 22 மாதங்களாக ஆட்சி புரிந்த காலந்தொட்டு இன்று வரை எங்களில் யாரும் ஊழல் காரணமாக நீதிமன்றத்தில் நிறுத்தப்படவில்லை. காரணம் நாங்கள் மக்களுக்கு உண்மையாக இருந்தோம் என்றார் அவர்.


Pengarang :