ECONOMYNATIONAL

போர் விமானங்கள் தாழ்வாகப் பறக்கிறதா? பதற்றம் வேண்டாம்- அது வெறும் பயிற்சியே

கோலாலம்பூர், ஆக 26- தேசிய தினக் கொண்டாட்டத்திற்கு தயாராகும் பொருட்டு இன்று தொடங்கி வரும் ஆகஸ்டு 31 ஆம் தேதி வரை அரச மலேசிய ஆகாயப் படை விமானங்கள் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளன.

வரும் புதன் கிழமை அனுசரிக்கப்படவிருக்கும் தேசிய தினத்தை முன்னிட்டு ஆகாயப்படை, தரைப்படை மற்றும் கடற்படையின் விமானங்கள் ஒருங்கிணைந்த பயிற்சியில் ஈடுபடும் என்று அரச மலேசிய ஆகாயப்படை வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

இது தவிர, அரச மலேசிய போலீஸ் படை, கடல் சார் அமலாக்கப் பிரிவு மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைகளுக்குச் சொந்தமான விமானங்களும் இந்த பயிற்சியில் பங்கு கொள்ளும் என்று அது தெரிவித்தது.

தேசிய தினம் வரையிலான காலக்கட்டத்தில் நடத்தப்படும் பயிற்சிகளின் போது விமானங்கள் தாழ்வாகப் பறக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே, தங்கள் குடியிருப்பு பகுதிகளில் விமானங்கள் தாழ்வாக பறப்பதைக் கண்டு பொதுக்கள் பதற்றமடையத் தேவையில்லை. இந்த பயிற்சிகள் கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் குவாந்தான் சுற்றுவட்டாரங்களில் நடைபெறும் எனவும் அது கூறியது.


Pengarang :