ECONOMYNATIONAL

இந்திய போர்க் கப்பல் கிள்ளான் துறைமுகம் வந்தடைந்தது

கோலக் கிள்ளான், ஆக 29 – இந்தியக் கடற்படையின் மூன்றாவது சரயு வகை ரோந்துக் கப்பலான ஐ.என்.எஸ். சுமேதா மூன்று நாள் பயணமாக நாட்டிற்கு நேற்று கோலக் கிள்ளான் துறைமுகம் வந்தடைந்தது.

இங்குள்ள புலாவ் இண்டா, தேசிய ஹைட்ரோகிராஃபிக் மையத்தில், கமாண்டிங் அதிகாரி  கமாண்டர் பி.பனீந்த்ரா தலைமையிலான இந்த கப்பலை அரச மலேசிய கடற்படையின் (ஆர்.எம்.என்.)  செயல்பாடுகள் மற்றும் வியூகப் பிரிவுக்கான உதவி தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் கிர் ஜுனைடி இட்ரிஸ் வரவேற்றார்.

2,200 டன் எடையும், 105.34 மீட்டர் நீளமும் கொண்ட இந்த ஐ.என்.எஸ். சுமேதா, உள்நாட்டிலேயே கட்டப்பட்ட கடற்படைக் கடல் ரோந்துக் கப்பலாகும். இது சுதந்திரமாகவும் கடற்படை நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது.

நேற்றிரவு நடைபெற்ற விருந்து நிகழ்வில் உரையாற்றிய பணீந்தரா,  ஐ.என்.எஸ். சுமேதாவின் கோலக் கிள்ளான் பயணம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதையும், கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும், இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது என்றார்.

இதற்கிடையில், மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான அனைத்து எதிர்கால திட்டங்களும் இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையை உருவாக்குவதற்கும் வலுவான உறவுகளை ஏற்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான களமாகத் தொடரும் என்று நம்புவதாக கிர் ஜுனைடி கூறினார்.

மலேசியாவுக்கான இந்திய தூதர் பி.என். ரெட்டியும்  இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.


Pengarang :