ECONOMYSELANGOR

சமூக மேம்பாட்டில் இளையோரின் பங்கு ஊக்கமூட்டும் வகையில் உள்ளது- மந்திரி புசார்

அம்பாங் ஜெயா, ஆக 29- சமூக நடவடிக்கைகளில் இளையோரின் பங்களிப்பு குறித்து மாநில அரசு மனநிறைவு கொண்டுள்ளது. இதன் வழி சமுதாயம் விரும்புகின்ற தலைமுறையை உருவாக்குவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அனைத்து வயதினரும் ஒன்றுபட்டு செயல்படுவதைக் காண தாங்கள் விரும்புவதாக கூறிய அவர், இந்நோக்கத்திற்காக சிலாங்கூர் இளைஞர் இயக்கம் உருவாக்கப்பட்டதாகச் சொன்னார்.

கோம்பாக் மாவட்ட நிலையில் நடைபெறும் இந்த இளைஞர் தின நிகழ்வில் இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து வயதினரும் கலந்து கொண்டுள்ளனர். சமூக மேம்பாட்டில் அனைத்து தரப்பினரின் குறிப்பாக இளைஞர்களின் பங்கேற்பு இருக்க வேண்டும் என நாம் விரும்புகிறோம் என்றார் அவர்.

இளைஞர்கள் சமூகத்திலிருந்து விலகியிருக்கக்கூடாது என நாங்கள் விரும்புகிறோம். தங்களுடன் ஒத்துப் போகிறவர்களுடன் மட்டுமே இணங்கிப் போகிற பழக்கம் மற்றவர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட வழி வகுக்கும் என்று அவர் சொன்னார்.

இங்குள்ள மெலாவத்தி மாலில் கோம்பாக் மாவட்ட நிலையிலான தேசிய இளைஞர் தினத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :