ECONOMYNATIONALSELANGOR

மலிவு விற்பனைத் திட்டத்தை ஆண்டு இறுதி வரை தொடர ஒரு கோடி வெள்ளி ஒதுக்கீடு

ஷா ஆலம், ஆக 31- ஜெலாஜா ஏசான் ராக்யாட் சிலாங்கூர் எனப்படும் அத்தியாவசியப் பொருள்களை மலிவு விலையில் விற்பனை செய்யும் திட்டத்தை மாநில அரசு ஆண்டு இறுதி வரை தொடரவிருக்கிறது.

இன்று ஆகஸ்டு 31 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 31 ஆம் தேதி வரை இந்த மலிவு விற்பனைத் திட்டத்தை தொடர்வதற்காக மாநில அரசு ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

ஆறு அத்தியாவசியப் உணவுப் பொருள்களை இலக்காக கொண்ட இந்த மலிவு விற்பனைத் திட்டம் கட்டங் கட்டமாக மாநிலத்திலுள்ள அனைத்து 56 தொகுதிகளிலும்  மேற்கொள்ளப் படும் என்று அவர் குறிப்பிட்டார்.

கோழி, மாட்டிறைச்சி, மீன், முட்டை, அரிசி, சமையல் எண்ணெய் ஆகிய அந்த ஆறு உணவு மூலப் பொருள்களும் சந்தையை விட குறைவான விலையில் விற்கப்படும் என்றார் அவர்.

நேற்றிரவு இங்குள்ள டத்தாரான் மெர்டேக்கா ஷா ஆலமில் சிலாங்கூர் மாநில நிலையிலான தேசிய தினக் கொண்டாட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொருள் விலையேற்றத்தால் கடும் சிரமத்தை எதிர்நோக்கி வரும் மக்களுக்கு உதவும் நோக்கிலான இந்த மலிவு விற்பனைத் திட்டத்தை மாநில அரசு மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) மூலம் மேற்கொண்டு வருகிறது. 

இத்திட்டம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 80,000 பேர் வரை பயனடைந்துள்ளனர்.


Pengarang :