ECONOMYSELANGOR

தேசிய தினத்தை முன்னிட்டு மூன்று சமூக இல்லங்களுக்கு உதவிப் பொருள்கள்- ஆயர் சிலாங்கூர் வழங்கியது

ஷா ஆலம், செப் 1- தேசிய தினத்தை முன்னிட்டு சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள மூன்று சமூக நல இல்லங்களுக்கு ஆயர் சிலாங்கூர் நிறுவனம் “பாக்ஸ் ஆஃப் ஹோப்“ திட்டத்தின் கீழ் அத்தியாவசிய உணவுப் பொருள்களை வழங்கியது.

அல்-இக்லாஸ் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் சிகிச்சை மையம், அன்பே சிவம் பராமரிப்பு இல்லம், ஏசான் அஷ்-ஷாகுர் சமூக நல இல்லம் ஆகியவை அந்த உதவிப் பொருள்களைப் பெற்றதாக பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் சென்.பெர்ஹாட் நிறுவனம் கூறியது.

இந்த உதவித் திட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட மையங்களுக்கு அரிசி, சமையல் எண்ணெய், சீனி, மாவு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன என்று அது தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

உதவித் தேவைப்படுவோருக்கு உதவுவதற்கு ஏதுவாக பொதுமக்களிடமிருந்து மேலும் அதிகமான நன்கொடைகளைப் பெறுவதற்காக  என்ற அகப்பக்கம் வாயிலாக “பாக்ஸ் ஆஃப் ஹோப்“ இலக்கவியல் முறை திட்டத்தை தாங்கள் ஆரம்பித்ததாக அந்நிறுவனம் குறிப்பிட்டது.

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் வசதி குறைந்த தரப்பினருக்கு 2,055 உணவுக் கூடைகளை ஆயர் சிலாங்கூர் வழங்கியுள்ளதை அந்நிறுவனத்தின் அகப்பக்கம் கூறுகிறது.

இது தவிர, பிபிஆர் எனப்படும் மக்கள் வீடமைப்புத் திட்ட சமூக மையத்தில் மாணவர்கள் இணையம் வழி கற்றல், கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொள்வதற்காக கணினி போன்ற உபகரணங்களையும் அந்நிறுவனம் வழங்கியுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பைச் சேர்ந்த மாணவர்கள் இணையம் வாயிலாக கல்வி பயில்வதற்கு ஏதுவாக சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் குறைந்தது 10 மையங்களுக்கு 100 கணினி உள்ளிட்ட உபகரணங்களை வழங்கவும்  அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Pengarang :