ECONOMYSELANGOR

விளக்கக்கூட்டங்களை வாரந்தோறும் நடத்துவீர்- கெஅடிலான் தொகுதிகளுக்கு அன்வார் வலியுறுத்து

ஷா ஆலம், செப் 12- பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏதுவாக தங்கள் பகுதிகளில் விளக்கக் கூட்டங்களை அதிகளவில் நடத்தும்படி  கெஅடிலான் தொகுதிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

வாரந்தோறும் நடத்தப்படும் இந்த விளக்க கூட்டங்களில் நல்லவற்றை விளக்கி ஊழல் நடவடிக்கைகளை நிராகரிக்க வேண்டியதன் அவசியத்தை பொது மக்களுக்கு வலியுறுத்த வேண்டும் என்று கெஅடிலான் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

கட்சித் தலைவர்கள் விளக்கக் கூட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். தொகுதிகள் தோறும் பயணம் மேற்கொள்வதற்கு ஏதுவாக கட்சியிலுள்ள 50 முதல் 60 தலைவர்கள் ஏற்பாடுகளை கவனிக்க வேண்டும் என அவர்  கேட்டுக் கொண்டார்.

கோம்பாக், தாமான் மெலாவத்தியில் நேற்று நடைபெற்ற  கெஅடிலான் கட்சியின் பிரசார பேரணியில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் கட்சியின் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி மற்றும் கட்சியின் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மக்களைக் கவர்வதற்கும் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும் ஏற்ற வழிகளை ஆராயும்படி கட்சித் தலைவர்களை பக்கத்தான் ஹராப்பான் தலைவருமான  அன்வார் தமதுரையில் கேட்டுக் கொண்டார்.


Pengarang :