ECONOMYHEALTHNATIONAL

இரத்தக் கையிருப்பு போதுமானதாக உள்ளது; இரத்த தானத்தையும் வரவேற்கிறோம்- இரத்த வங்கி கூறுகிறது

கோலாலம்பூர், செப் 13 – தேசிய இரத்த வங்கியில் தற்போது போதுமான இரத்தக் கையிருப்பு உள்ளது. ஆயினும், தொடர்ந்து இரத்த தானம் தேவைப்படுகிறது என்று துணை சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் நூர் அஸ்மி கசாலி கூறினார்.

நாடு முழுவதும் தினசரி மருத்துவ சிகிச்சைக்காக சுமார் 2,000 பை ரத்தம் தேவைப்படுவதால் இரத்தக் கையிருப்பை தொடர்ந்து உறுதி செய்வதற்கு இரத்த தானம் தேவைப்படுகிறது என்று அவர் சொன்னார்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் அறுவை சிகிச்சை, விபத்து மற்றும் மருத்துவ சிகிச்சைகள் உட்பட பல்வேறு காரணங்களுக்காக தினமும் சுமார் 500 முதல் 600 பை இரத்தம் தேவைப்படுகிறது. எங்களின் தற்போதைய கையிருப்புடன் இன்னும் கூடுதலாக இரத்தம் தேவைப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.

அனைத்து விதமான இரத்தப் பிரிவைக் கொண்டவர்களிடமிருந்தும் இரத்த தானத்தை எதிர்பார்க்கிறோம்.

ஆனால், நிச்சயமாக ‘ஓ’ இரத்த வகை அனைவருக்கும் பயன்படுத்தப்படலாம். இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் உலகளாவிய நன்கொடையாளராக கருதப்படுவர்.

எங்களுக்கு தற்போது  ‘ஓ’ நெகட்டிவ் வகை இரத்தம் தேவைப்படுகிறது. மேலும் அதிகமான மலேசியர்கள் இரத்த தானம் செய்ய வரவேற்கப்படுகிறார்கள் என்றார் அவர்.

மலேசிய ஆயுள் காப்புறுதிச் சங்கம் (லியாம்) ஏற்பாடு செய்த நாடு தழுவிய இரத்த தானம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரத்தை நேற்று இங்கு தொடக்கி வைத்தப் பின்னர்  செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.


Pengarang :