ECONOMY

வெள்ளத்தின் போது தற்காலிக நிவாரண மையங்கள் முழு அளவில் செயல்படும்- நட்மா

புத்ரா ஜெயா, செப் 15– வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான தற்காலிக நிவாரண மையங்கள் இனி முழு அளவில் செயல்படும். பி.பி.எஸ். எனப்படும் அத்தகைய மையங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படாது. மாறாக, அந்த பாதுகாப்பு கவசத்தை அணிவது ஊக்குவிக்கப்படும்.

வரும் நவம்பர் மாதம் தொடங்கி அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வதற்கு எடுக்கப்பட்ட முடிவுகளில் இதுவும் அடங்கும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) கூறியது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான உணவு கிடைப்பதற்கு ஏதுவாக பி.பி.எஸ். மையங்களில் கூட்டு அடிப்படையில் சமையல் செய்வதற்கும் அனுமதி வழங்கப்படும் என்று நட்மாவின் அமலாக்க நடவடிக்கை பிரிவு துணைத் தலைமை இயக்குநர் மியோர் இஸ்மாயில் மியோர் அக்கிம் கூறினார்.

பி.பி.எஸ். மையங்களில் இருப்போர் கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு ஏதுவாக முகக் கவசம் அணிவதை நாங்கள் ஊக்குவிப்போம். எனினும், கட்டாயப்படுத்த மாட்டோம் என அவர் குறிப்பிட்டார்.

ஈராண்டுகளுக்கு முன்னர் கோவிட்-19 நோய்த் தொற்று ஏற்பட்டது முதல் தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியிருப்போரின் எண்ணிக்கை அந்த இடத்தின் அளவைப் பொறுத்து கட்டுப்படுத்தப்பட்டதோடு வெள்ள அகதிகளுக்கு கூட்டு முறையில் சமையல் செய்வதும் தடை செய்யப்பட்டது.

வரும் நவம்பர் மாதம் தொடங்கி அடுத்தாண்டு ஜனவரி வரை ஏற்படக்கூடிய வடகிழக்கு பருவமழை காரணமாக நாட்டில் குறிப்பாக கிழக்கு கரை மாநிலங்களில் வெள்ளம் ஏற்படும் என வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.


Pengarang :