ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சுங்கை பீசி-உலு கிளாங் நெடுஞ்சாலை இன்று திறப்பு- ஒரு மாதத்திற்கு டோல் கட்டணம் இலவசம்

கோலாலம்பூர், செப் 16- சுங்கை பீசி-உலு கிளாங் அடுக்குச் சாலையின் முதல் கட்டத் தடம் இன்று திறக்கப்படுவதை முன்னிட்டு வாகனமோட்டிகளுக்கு ஒரு மாதத்திற்கு இலவச டோல் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

இந்த நெடுஞ்சாலை திறக்கப்படுவதன் மூலம் எம்.ஆர்.ஆர்.2, ஜாலான் அம்பாங் மற்றும் ஜாலான் லோக் யூவில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை கணிசமான அளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்த புதிய நெடுஞ்சாலை திறக்கப்பட்டதன் வழி சம்பந்தப்பட்ட அந்த மூன்று சாலைகளிலும் வாகனப் போக்குவரத்து 36 விழுக்காடு வரை குறையும் என்பதோடு பயண நேரமும் 75 நிமிடத்திலிருந்து 25 நிமிடமாக குறையும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ பாடிலா யூசுப் கூறினார்.

மலேசிய குடும்பத்தின் சுபிட்சத்தை உறுதி செய்வதற்கு மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது. இதன் மூலம் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் வசிப்பவர்களின் பயண நேரத்தை குறைக்கவும் கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் இயலும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நெடுஞ்சாலை திறக்கப்படுவதன் மூலம் மாநகரில் குறிப்பாக கோலாலம்பூரின் மேற்கு பகுதியில் நெரிசலைக் குறைத்து சீரான போக்குவரத்தை உறுதி செய்யும் முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண முடியும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

நேற்று இங்குள்ள புக்கிட் தெராத்தாய் டோல் சாவடியில் இந்த நெடுஞ்சாலையின் முதல் கட்ட தடத்தை திறந்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.


Pengarang :