ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பாங்கியில் மலிவு விற்பனை- ஒன்றரை மணி நேரத்தில் 300 கோழிகள் விற்றுத்  தீர்ந்தன

காஜாங், செப் 16- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் இங்குள்ள பாங்கி, பி.கே.என்.எஸ். காம்ப்ளெக்சில் நடைபெற்ற மலிவு விற்பனையில் 300 கோழிகள் சுமார் ஒன்றரை மணி  நேரத்தில் விற்றுத் தீர்ந்தன.

அதே எண்ணிக்கையில் விற்பனைக்கு வைக்கப்பட்ட இறைச்சி, கெம்போங் மீன் முட்டை ஆகிய உணவுப் பொருள்களும் அதே காலக்கட்டத்தில் விற்கப்பட்டு விட்டதாக இந்த விற்பனைத் திட்ட இயக்குநர் முகமது புஹாரி பாச்சோக் கூறினார்.

இந்த மலிவு விற்பனை குறித்து பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டதால் கிலை 8.30 மணி முதலே பொது மக்கள் இப்பொருள்களை வாங்குவதற்கு வரிசையில் காத்திருந்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.

நாங்கள் விற்பனைக்கு வைத்த அரிசி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருள்களில் சுமார் 80 விழுக்காடு ஒன்றரை மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்து விட்டன என அவர் குறிப்பிட்டார்.

சந்தையை விட மிகவும் குறைவான விலையில் விற்கப்படும் காரணத்தால் இப்பொருள்களுக்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுவதாக அவர் சொன்னார்.

மாநில மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த மலிவு விற்பனைத் திட்டத்தை மாநில அரசு கடந்த ஆகஸ்டு 31 ஆம் தேதி முதல் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை மாநிலத்திலுள்ள அனைத்து 56 தொகுதிகளிலும் நடத்துகிறது. 

சந்தையை விட 30 விழுக்காடு குறைவான விலையில் பொருள்களை விற்பனை செய்யும் இத்திட்டத்திற்காக மாநில அரசு ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. 


Pengarang :