ECONOMYNATIONAL

பொய்யான பணக் கோரிக்கை- ஐவர் விசாரணைக்காக தடுத்து வைப்பு

கோலாலம்பூர், செப் 22 – இலக்கவியல் தொழில்நுட்ப பயிற்சித் திட்டத்தை நடத்தியதாக கூறி 2 கோடியே 70 லட்சம் வெள்ளிக்கான பொய்யான பணக் கோரிக்கையை தாக்கல் செய்தது தொடர்பாக ஐந்து நபர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கைது செய்துள்ளது.

முப்பதேழு முதல் 50 வயதுடைய சந்தேக நபர்களை விசாரணைக்காக மூன்று நாள் தடுத்து வைப்பதற்கான அனுமதியை ப  மாஜிஸ்திரேட் இர்ஸா சுலைக்கா ரோஹனுடீன் நேற்று வழங்கினார்.

நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள எம்.ஏ.சி.சி. தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்த போது ஒரு பெண் உள்ளிட்ட அந்த ஐவரும் கைது செய்யப்பட்டனர்.

அரசாங்க நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்ட இலக்கவியல் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சித் திட்டத்திற்காக பொய்யான பணக் கோரிக்கைகளை  அந்த சந்தேக நபர்கள் தாக்கல் செய்ததாக நம்பப்படுகிறது. எனினும், அந்தப் பயிற்சி பயிற்சி நடத்தப்படவில்லை.

இதனிடையே, இந்த கைது நடவடிக்கையை உறுதிப்படுத்திய எம்.ஏ.சி.சி. சிறப்பு நடவடிக்கைப் பிரிவு மூத்த இயக்குநர் டத்தோ டான் காங் சாய்,  2009 ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 18ஆம் பிரிவின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.


Pengarang :