ECONOMYSELANGOR

குறைந்தபட்ச சம்பளம்- தொழிலாளர் நலன் காப்பதில் சிலாங்கூர் முன்னோடியாக விளங்க வேண்டும்

ஷா ஆலம், செப் 22- வாழ்க்கைச் செலவின அதிகரிப்பால் மக்கள் போராடும் நிலையில் தொழிலாளர்களின் நிலையைப் பாதுகாப்பதில் சிலாங்கூர் முன்னோடியாக இருக்க வேண்டும் என்று கோத்தா டாமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.

முதலாவது சிலாங்கூர் திட்ட விவாதத்தின் போது தாம் பரிந்துரைத்தபடி மாநில அரசு 1,600 வெள்ளி குறைந்தபட்ச ஊதியத்தை செயல்படுத்த முடியும் என்று நம்புகிறேன் என்று ஷாதிரி மன்சோர் கூறினார்.

தனியார் நிறுவன அளவில் செயல்படுத்த முடியவில்லை என்றால், மாநில அரசு சார்பு நிறுவனங்களின் (ஜிஎல்சி) அளவில் இத்திட்டத்தை தொடங்கலாம் என்று அவர் ஆலோசனை கூறினார்.

நம்மால் அதைச் செய்ய முடியும் என்பதை நான் அறிவேன். மேலும் சிலாங்கூர் அரசு   தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதில் முன்னோடியாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

மீடியா சிலாங்கூர் முகநூல் மற்றும் யூடியூப் சிலாங்கூர் டிவி வாயிலாக நேற்று இடம் பெற்ற நேரலை விவாத நிகழ்வில் அவர் இவ்வாறு சொன்னார்.

சமீபத்தில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில சட்டமன்ற கூட்ட விவாதத்தின் போது முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை 1,600 வெள்ளியாக அதிகரிக்கலாம் என்று ஷாதிரி பரிந்துரைத்தார்.

தற்போது தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த மக்களுக்கும் சுமையாக உள்ள வாழ்க்கைச் செலவினப் பிரச்சினையை ஆராய்ந்த பின்னரே இந்த அதிகரிப்பு அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சிலாங்கூரில் தொழிலாளர்களுக்கான சம்பள விகிதத்தை நிர்ணயம் செய்வதில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிதி நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியிருந்தார்.


Pengarang :