ECONOMYSELANGOR

சுங்கை துவா தொகுதியில் ஐந்து இடங்களில் மலிவு விற்பனை- 1,700 பேர் பயனடைந்தனர்

கோம்பாக், செப் 22- இந்த மாதம் தொடங்கி  ஐந்து இடங்களில் நடைபெற்ற ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனைத் திட்டத்தின் மூலம் சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 1,700 பேர் பயனடைந்துள்ளனர்.

புத்ரி லக்ஸ்மணா, கோம்பாக் பெர்மாய், தாமான் ஜாசா பெர்வீரா, பத்து கேவ்ஸ் பொது மைதானம் மற்றும் லக்ஸ்மான பெர்மாய் ஆகிய ஐந்து இடங்களில் இந்த மலிவு விற்பனை நடைபெற்றுள்ளதாக தொகுதி சேவை மைய நிர்வாகி மைமுன் மிஸ்மான் கூறினார்.

நான்கு இடங்களில் இந்த மலிவு விற்பனை சீராக நடைபெற்றது. இன்று லக்ஸ்மணா பெர்மாய் பகுதியில் நடைபெற்ற மலிவு விற்பனை மழை காரணமாக சற்று சுணக்கம் கண்டது என அவர் சொன்னார்.

இவ்விடங்களில் கோழி மற்றும் முட்டைக்கு  அமோக வரவேற்பு கிடைத்ததாக கூறிய அவர், விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் இவ்விரு அத்தியாவசியப் பொருள்களும் விற்றுத் தீர்ந்தன என்றார்.

மற்ற பொருள்களும் முழுமையாக விற்கப்பட்டு விட்டன. சந்தையை விட குறைவான விலையில் கிடைக்கும் இப்பொருள்களை வாங்குவதில் பொது மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர் என்றார் அவர்.

மாநிலத்தின் 56  சட்டமன்றத் தொகுதிகளில் இந்த மலிவு விற்பனை நடத்த மாநில அரசு ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.


Pengarang :