ECONOMY

நாடாளுமன்றத்தைக் கலைக்க பிரதமருக்கு அம்னோ நெருக்குதல் தருவது முறையல்ல- அன்வார் கருத்து

சுபாங் ஜெயா, அக் 3-மக்களவையில் பெரும்பான்மை இல்லாத நிலையில் நாடாளுமன்றத்தைக் கலைக்க பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்கு அம்னோ நெருக்குதல் தருவது முறையல்ல என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நாடாளுமன்றத்தில் உள்ள 222 இடங்களில் வெறும் 38ஐ மட்டுமே தன் வசம் வைத்திருக்கும் அம்னோவுக்கு அவ்வாறு செய்யும் தகுதி அறவே கிடையாது என்று பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவரான அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் அம்னோவுக்கு வெறும் 38 இடங்கள் மட்டுமே உள்ளன. நமது ஆட்சி முறையில் ஆட்சியைக் கலைக்கச் சொல்லும் அதிகாரம் 38 உறுப்பினர்களுக்கு கிடையாது என்று அவர் சொன்னார்.

பிரதமருக்கு பலம் இருக்கும் பட்சத்தில், பிரதமர் என்ற முறையில் தெளிவான சிந்தனையுடன் அவர் செயல்படும் பட்சத்தில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இஸ்மாயில் சப்ரி அவ்வாறு செய்யலாம் என அன்வார் தெரிவித்தார்.

இங்குள்ள டோர்செட் தங்கும் விடுதியில் நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தேர்தல் இவ்வாண்டிலேயே நடத்தப்பட வேண்டும் என அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு கெஅடிலான் கட்சியின் தலைவருமான அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

அம்னோ உச்சமன்றத்தின் இம்முடிவின் படி கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 40(1) வது ஷரத்தின் கீழ் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான தேதியை இஸ்மாயில் சப்ரி மாமன்னரிடம் சமர்ப்பிப்பார்.


Pengarang :