ECONOMYNATIONAL

நாடாளுமன்றம் இன்று தொடங்குகிறது- பொருளாதார சவால், வெள்ளப் பிரச்னைக்கு விவாதத்தில் முன்னுரிமை

கோலாலம்பூர், அக் 3- இன்று தொடங்கும் 14வது நாடாளுமன்றத்தின் ஐந்தாம் தவணைக்கான மூன்றாவது கூட்டத் தொடரில் விவாதிக்கப்படவுள்ள அம்சங்களில் பொருளாதார சவால்கள் மற்றும் வெள்ளப் பிரச்னை முக்கிய இடத்தைப் பெறும்.

பாசீர் சாலாக் தொகுதி உறுப்பினர் டத்தோஸ்ரீ தாஜூடின் அப்துல் ரஹ்மான் இந்த கேள்வியை பிரதமரிடம் முன்வைப்பார் என்று நாடாளுமன்ற அகப்பக்கத்தில் இடம் பெற்றுள்ள நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலேசிய குடும்பத்தின் நலன் காப்பதில் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து தாஜூடின் கேள்வியெழுப்புவார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 2019 முதல் 2022 வரையிலான பி40, எம்40 மற்றும் டி20 தரப்பினரின் குடும்ப வருமானம் தொடர்பான தரவுகள் குறித்து போர்ட்டிக்சன் உறுப்பினர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமரிடம் கேள்வியை முன்வைப்பார்.

ஆண்டு இறுதியில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் வெள்ளத்தை எதிர்கொள்வதற்காக நாடு முழுவதும் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு நிலையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து கோத்தா சமரஹான் உறுப்பினர் டத்தோ ரூபியா வாங் எழுப்பவுள்ள கேள்வி அடுத்து இடம் பெறும்.

ஆண்டு இறுதியில் கோலாலம்பூரில் ஏற்படவிருக்கும் வெள்ளத்தை எதிர்கொள்ள  மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து புக்கிட் பிந்தாங் உறுப்பினர் ஃபூங் குய் லுன் கேள்வியை முன்வைப்பார்.


Pengarang :