ECONOMYNATIONAL

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட 14 சட்டங்களுக்கு மாமன்னர் ஒப்புதல்

கோலாலம்பூர், அக் 3- நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவலைத் தடுக்கும்  2022 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (திருத்தம்) சட்டம் (எண். 3) உள்ளிட்ட 14 சட்டங்களின் நிறைவேற்றத்திற்கு மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடீன் அல்-முஸ்தபா பில்லா ஷா ஒப்புதல் அளித்துள்ளார்.

மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு மையம் (கலைத்தல்) சட்டம் 2022, ஊழியர் காப்பீட்டு அமைப்பு (திருத்தம்) சட்டம் 2022, பணியாளர் சமூக பாதுகாப்புச் சட்டம் (திருத்தம்) 2022 மற்றும் கிழக்கு கடற்கரை பொருளாதார மண்டல மேம்பாட்டு மன்றச் சட்டம் (திருத்தம்) ஆகியவையும் அங்கீகரிக்கப்பட்ட சட்டங்களில் அடங்கும் என்று மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ அஸார் அஜிசான் கூறினார்.

மேலும், நெல் மற்றும் அரிசி கட்டுப்பாடு சட்டம் (திருத்தம்) 2022, குற்றவாளிகளின் கட்டாய வருகை சட்டம் (திருத்தம்) 2022, மத்திய வேளாண் சந்தைப்படுத்தல் வாரிய சட்டம் (திருத்தம்) 2022, நீதி மன்ற சட்டம் (திருத்தம்) 2022 மற்றும் 2022 கிரிமினல் நடைமுறை  (திருத்தம்) சட்டம் ஆகியவையும் அதில் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.

இவை தவிர, தேசிய வனச் சட்டம் (திருத்தம்) 2022, ஆயுதப்படை நிதிச் சட்டம் (திருத்தம்) 2022, விஷச் சட்டம் (திருத்தம்) 2022 மற்றும் இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2022 ஆகியவற்றுக்கும் மாமன்னர் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இன்றைய மக்களவை அமர்வின் போது அஸார் குறிப்பிட்டார்.

14 வது நாடாளுமன்றத்தின் ஐந்தாம் தவணைக்கான இரண்டாம் கூட்டத் தொடரில் மக்களவை நிறைவேற்றிய அனைத்து 25 மசோதாக்களுக்கும் மேலவை ஒப்புதலை வழங்கியுள்ளதாக கூறும் மேலவை சபாநாயகர் டான்ஸ்ரீ டாக்டர் ரைஸ் யாத்திமின் செய்தியையும் அஸார் மக்களவையில் வெளியிட்டார்.


Pengarang :